/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றுவதில் பின்வாங்கல்
/
ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றுவதில் பின்வாங்கல்
ADDED : டிச 15, 2024 01:14 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்படும் என நேற்று முன்தினம் கூறிய அமைச்சர் கே.என்.நேரு நேற்றைய ஆய்வின் போது ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து பின் வாங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 3வது நாளாக தொடர்ந்த வடகிழக்கு பருவ மழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட நெல், வாழை, கரும்பு பயிர்கள் சேதமடைந்தன.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ராமநதி, கடனாநதி அணைகள் நிரம்பி விட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்படும் 22 ஆயிரம் கன அடி நீர் தாமிரபரணியில் செல்கிறது. அத்துடன் மழை நீரும் சேர்ந்து 80 ஆயிரம் கன அடி நீர் தாமிரபரணியில் வெள்ளமாக செல்கிறது.
பயிர்கள் சேதம்
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நதிக்கரையையொட்டி அதிகளவில் நெல் சாகுபடி நடக்கிறது. தற்போது மழையால் சுத்தமல்லி, கருங்காடு உள்ளிட்ட இடங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. 1117 எக்டேர் நெல் பயிரும், 210 எக்டேர் பயிர் வகைகள், 65 எக்டேரில் வாழை, விக்கிரமசிங்கபுரம், அனவன்குறிச்சி உட்பட மாவட்டம் முழுதும் நூற்றுக்கணக்கான ஏக்கர் கரும்பும் சேதமடைந்துள்ளன.
அமைச்சர் கே.என்.நேரு பல்டி
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.என்.நேரு நேற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள சேதப்பகுதிகளை பார்வையிட்டார். ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட்டில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியையும் பார்வையிட்டார்.
நேற்று முன்தினம் அமைச்சர், ''தாமிரபரணிக்கு செல்லும் நீர்ஓடை மீது உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை கணக்கெடுத்து விட்டோம்.
நிச்சயம் அகற்றுவோம்,'' என்றார். நீர்வழிப்பாதையில் இருப்பதால் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற கோர்ட் உட்பட யாரும் தடை விதிக்க மாட்டார்கள் எனவும் தெளிவுபடுத்தினார்.
ஆனால் நேற்று அவரது பார்வை ஒரே நாளில் மாறி இருந்தது. நேற்றைய ஆய்வில் ரூ.5 கோடி மதிப்பில் ஜங்ஷன் பகுதியில் ஓடை பகுதியை விரிவுபடுத்தி இருபுறமும் சுவர் எழுப்பி பாலம் அமைக்கப்படும் என்றார்.
இதற்காக நகராட்சி நிர்வாக ஆணையர் நேரடியாக வந்துள்ளார் எனவும் தெரிவித்தார். ஆனால் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் குறித்து எதுவும் கூறவில்லை. அதுமட்டுமின்றி, 'ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டி விட்டான் என்ன செய்ய ... அவனுக்கு அப்ரோச் கொடுங்கப்பா,' என கூறி சென்றார்.
பின் அமைச்சர் சீவலப்பேரி, சேரன்மகாதேவி, விக்கிரமசிங்கபுரம் மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார்.
கண்காணிப்பு அலுவலர் சந்தீப் நந்தூரி, கலெக்டர் கார்த்திகேயன், எம்.எல்.ஏ., அப்துல் வஹாப், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.