ADDED : பிப் 03, 2026 05:37 AM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி: மொபைல் போனில் வந்த 'லிங்க்'கை தொட்ட நபரின் வங்கி கணக்கில் இருந்து, 36,000 ரூபாய் பறிபோனது.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த, 33 வயது நபர், ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்கு அபராதம் விதிக்கப்படுவதாக, அவரது மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
தெரிந்த போலீஸ்காரரின் எண்ணில் இருந்து அந்த குறுஞ்செய்தி வந்ததால், அதிலிருந்த லிங்க்கை, ஒர்க் ஷாப் உரிமையாளர் 'கிளிக்' செய்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில், அவரது வங்கி கணக்கில் இருந்து, 36,000 ரூபாய் மாயமானது.
போலீசில் விசாரித்தபோது, குறிப்பிட்ட போலீஸ்காரரின் எண்ணிலிருந்து, பலருக்கும் இதேபோல் குறுஞ்செய்தி சென்றது தெரிந்தது. புகாரில், திருநெல்வேலி போலீசார் விசாரிக்கின்றனர்.
