ADDED : மே 26, 2026 03:26 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த சேவியர் 80, கால்நடைத்துறையில் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், சி.பி.ஐ., போலீஸ் அதிகாரிகள் என கூறி வீடியோ காலில் பேசி மிரட்டினர்.
சேவியரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி சட்டவிரோத செயல்கள் நடைபெற்றுள்ளதாகவும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் “டிஜிட்டல் அரெஸ்ட்” செய்யப்பட்டுள்ளதாகவும் மிரட்டி வந்தனர்.
சேவியர் தனது 2 வங்கி கணக்குகளில் இருந்து பல தவணைகளாக ரூ.53 லட்சத்தை மோசடி கும்பல் கூறிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.
பின்னர் மோசடி நடந்ததை உணர்ந்த அவர், திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், பெங்களூருவை சேர்ந்த சந்தோஷ் பிரபு 44, என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. பெங்களூருவில் பதுங்கியிருந்த சந்தோஷ் பிரபுவை போலீசார் கைது செய்தனர்.
