/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கைதிகள் தினமும் அதிகரிப்பால் நிரம்பி வழிகிறது பாளை., மத்திய சிறை
/
கைதிகள் தினமும் அதிகரிப்பால் நிரம்பி வழிகிறது பாளை., மத்திய சிறை
கைதிகள் தினமும் அதிகரிப்பால் நிரம்பி வழிகிறது பாளை., மத்திய சிறை
கைதிகள் தினமும் அதிகரிப்பால் நிரம்பி வழிகிறது பாளை., மத்திய சிறை
ADDED : ஆக 01, 2011 02:07 AM
பாளை., மத்திய சிறையில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட சிறையில் அடைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துவருவதால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் கைதாகும் திமுகவினரும் நெல்லைக்கு கொண்டு வரப்படுவதால் சிறைத்துறையினர் திணறிவருகின்றனர்.தமிழகத்தில் சென்னை புழல், புழல்-1, திருச்சி, கோவை, மதுரை, சேலம், கடலூர், வேலூர் மற்றும் பாளையங்கோட்டையில் மத்திய சிறை உள்ளது. பெண் கைதிகளுக்காக வேலூர், திருச்சியில் மத்திய சிறைகள் உள்ளன. பாளை., சிறையில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி உட்பட பல்வேறு தேசிய அரசியல் தலைவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.பழமை மற்றும் பாதுகாப்பு நிறைந்த பாளை., மத்திய சிறையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் ஆயிரத்து 470 பேர் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர். பாளை., சிறையில் அதிகபட்சமாக ஆயிரத்து 200 பேர் மட்டுமே வைப்பதற்கு இடவசதி உள்ளது. கூடுதலாக தற்போது 270 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் நிலமோசடியில் ஈடுபட்டதாக கைதான மதுரையை சேர்ந்த திமுகவினர் பொட்டு சுரேஷ், மாவட்ட செயலாளர் தளபதி, கொடி சந்திரசேகர் உட்பட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சமச்சீர் கல்வியை வலியுறுத்தி திமுகவினர் நடத்திய போராட்டத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏ.,மாலைராஜா, துணை மேயர் முத்துராமலிங்கம் உட்பட 47 நெல்லை திமுகவினர் சிறையில் உள்ளனர்.
சிறையில் கைதிகள் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கைதிகளுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க முடியாமல் சிறைத்துறை நிர்வாகம் திணறிவருகிறது.இதற்கிடையே திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன், பஞ்.,தலைவர் பாலச்சந்திரன், திமுக செயலாளர் சுப்பிரமணியன் உட்பட 7 பேர் நேற்று பாளை., மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டனர்.நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் கைதாகும் விசாரணைக் கைதிகள், ரிமாண்ட் கைதிகள் என பாளை., மத்திய சிறைக்கு கொண்டு வரப்படும் கைதிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துவருகிறது.இன்று(1ம் தேதி) சமச்சீர் கல்வியை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், மறியல் நடத்த திமுக அழைப்பு விடுத்துள்ளது. போலீஸ் அனுமதியில்லாததால் மறியலில் ஈடுபடும் திமுகவினர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்ய நேரிட்டால் அவர்களை எப்படி சிறையில் அடைப்பது என தெரியாமல் போலீசாரும், சிறைத்துறை அதிகாரிகளும் கவலையடைந்துள்ளனர்.
கே.செல்வக்குமார்-