/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை தாலுகா ஆபீஸ் ஊழியர்கள் திடீர் வெளிநடப்பு
/
நெல்லை தாலுகா ஆபீஸ் ஊழியர்கள் திடீர் வெளிநடப்பு
ADDED : ஆக 11, 2011 02:20 AM
திருநெல்வேலி : நெல்லை தாலுகா ஆபீசிற்கு குத்தகை நகல் சான்றிதழ் வாங்க வந்த வக்கீல் அவதூறாக பேசியதாக கூறி ஊழியர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை தாலுகா ஆபீஸ் ஜங்ஷன் தாட்கோ மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நெல்லை டவுன் கோட்டையடி தெருவை சேர்ந்த சுடலை என்பவர் குத்தகை நகல் சான்றிதழ் வழங்க கோரி மனு செய்திருந்தார். இவரது மகன் பகத்சிங் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் சான்றிதழ் வழங்குமாறு பல முறை கேட்டுள்ளார். அப்போது குத்தகை ஆவணம் குறித்து விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் இன்று(நேற்று) மாலை 3 மணிக்கு வருமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து பகத்சிங், தனது நண்பர் வக்கீல் ரமேஷை தாலுகா ஆபீசிற்கு அழைத்து சென்றார். அப்போது ரமேஷ், குத்தகை நகல் சான்றிதழ் கேட்டுள்ளார். அதற்கு ஊழியர்கள் நாளை(இன்று) வருமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், மண்டல துணை தாசில்தார் முன் தரையில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து தாலுகா அலுவலக ஊழியர்கள், தங்களை ரமேஷ் அவதூறாக பேசியதாக கூறி வருவாய் துறை அலுவலர் சங்க நெல்லை வட்ட தலைவர் பேச்சிமுத்து தலைமையில் தாலுகா அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனையறிந்த தாசில்தார் அபுல்காசிம், ஊழியர்களையும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ரமேஷையும் சமரசம் செய்தார். இதனையடுத்து ரமேஷ் உண்ணாவிரதத்தை கைவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினார். இச் சம்பவம் தாலுகா அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வக்கீல் ரமேஷ் கூறியதாவது: எனது நண்பர் பகத்சிங்கின் தந்தை சுடலை குத்தகை நகல் சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் 21ம்தேதி விண்ணப்பம் செய்திருந்தார். இங்குள்ள ஊழியர்கள் சான்றிதழ் வழங்காமல் கால தாமதம் செய்ததோடு, அவதூறாக பேசினர். ஊழியர்கள் இன்று(நேற்று) மாலை 3மணிக்கு சான்றிதழ் தருவதாக கூறினர். ஆனால் மாலை 6மணிக்கு நாளை(இன்று) வருமாறு அலட்சியமாக பதில் கூறினர்.
இதனை கண்டித்து மண்டல துணை தாசில்தார் முன் உண்ணாவிரதம் இருந்தேன். தாசில்தார் அபுல்காசிம், சமரசம் செய்து குத்தகை நகலை வெள்ளிக்கிழமை தருவாக கூறியதை அடுத்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டேன் என்றார். இது குறித்து தாசில்தார் அபுல்காசிம் கூறியதாவது: மனுதாரர் சுடலையின் விண்ணப்பம் குறித்து நேரில் சென்று விசாரணை நடத்தி சான்றிதழ் வழங்க ஒரு மாதம் கால அவகாசம் உள்ளது. ஆனால் சுடலை தரப்பில் வந்த வக்கீல் ரமேஷ், ஏ1 கிளார்க்கிடம் ஆவேசமாக பேசி, உடனே சான்றிதழ் வழங்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நான், ஊழியர்கள் மற்றும் வக்கீல் ரமேஷ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தேன். ரமேஷிடம் வரும் வெள்ளிக்கிழமை சான்றிதழ் வழங்குவதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டார் என்றார்.