/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை, குமரி மாவட்டங்களை "கலங்கடித்த' 8 கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
/
நெல்லை, குமரி மாவட்டங்களை "கலங்கடித்த' 8 கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
நெல்லை, குமரி மாவட்டங்களை "கலங்கடித்த' 8 கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
நெல்லை, குமரி மாவட்டங்களை "கலங்கடித்த' 8 கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
ADDED : ஆக 11, 2011 02:21 AM
திருநெல்வேலி : நெல்லை, குமரியில் செயின்பறிப்பு, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டது எப்படி என 'திடுக்' தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் ரோட்டில் தனியே நடந்து செல்லும் பெண்களிடம் மோட்டார்பைக்குகளில் சென்று செயின்களை பறித்தவர்கள், கூட்டுறவு பாங்குகளில் கொள்ளையடிக்க முயற்சி செய்தவர்களை கைது செய்ய டி.ஐ.ஜி., (பொறுப்பு) வரதராஜூ, எஸ்.பி., விஜயேந்திர பிதரி உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டது.
நான்குநேரி இன்ஸ்பெக்டர் விஜயக்குமார், ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் கோவிந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் துரைச்சாமி, சிவசுப்பு மற்றும் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கான்சாபுரத்தை சேர்ந்த வெங்கடாசலம்(30), பத்தமடையை சேர்ந்த முத்தையா என்ற கொம்பன்(35), அம்பாசமுத்திரம் பொத்தையை சேர்ந்த மாரிமுத்து(25) கைது செய்யப்பட்டனர். நெல்லை மாநகரம், முன்னீர்பள்ளம் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் சென்று தங்கச்செயின் பறிக்கப்பட்ட சம்பவங்கள், மேலச்செவல் பாண்டியன் கிராம பாங்க் கொள்ளை முயற்சி சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
துப்பு துலங்கிய விதம் : இவர்கள் தவிர மேலும் சில கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய மகாராஜன், கோயம்புத்தூரை சேர்ந்த பாண்டி, சதீஷ், முருகன், இசக்கிமுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பாண்டி, சதீஷ் தவிர மற்ற ஆறு பேருக்கும் சொந்த ஊர் முன்னீர்பள்ளம் அருகேயுள்ள தேசமாணிக்கம். கோயம்புத்தூருக்கு கட்டட வேலைக்கு சென்ற தேசமாணிக்கத்தை சேர்ந்த கருப்பசாமிக்கு முதலில் பாண்டியுடன் தொடர்பு ஏற்பட்டது. பாண்டிக்கு ஏற்கனவே கோயம்புத்தூரில் செயின்பறிப்பு வழக்குகளில் தொடர்புள்ளது. 'நண்பர்கள்' கிடைத்ததால் பாண்டி தன் நண்பர்களுடன் நெல்லைக்கு வந்தார். முதலில் வீரவநல்லூர் பகுதியில் செயின்பறிப்புச்சம்பவத்தில் பாண்டி ஈடுபட்டுள்ளார். பின்னர் பாண்டி, சதீஷ், கோயம்புத்தூரை சேர்ந்த பிரபு உள்ளிட்டோர் அஞ்சுகிராமம் இன்ஜி., கல்லூரி பாங்க் ஏ.டி.எம்., சென்டரை செல்போனில் படம் எடுத்து கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி சம்பவத்தன்று ஏ.டி.எம்., சென்டரில் கொள்ளையடிக்க முயன்றனர். ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைக்க முடியாததால் சேதப்படுத்தி தூக்கி எறிந்தனர்.
கொடூரக்கொலை : சம்பவத்தின் போது காவலாளிகள் பால்பாண்டியன், சுடலைமுத்துவை தலையில் கல்லை தூக்கி போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர். கல்லை போட்டதும் தூங்கிக்கொண்டிருந்த பால்பாண்டியன் ரத்தம் சொட்டியபடி சிறிதுதூரம் ஓடிச்சென்று துடிதுடித்து இறந்ததாக இவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இருவரை கொலை செய்த பாவத்தை போக்க பாண்டி, சதீஷ், பிரபு பாபநாசம் ஆற்றில் குளித்து கோயிலுக்கு சென்றுள்ளனர்.
கடப்பாறையில் இன்ஷியல் எழுத்து : மேலச்செவல் பாங்க் கொள்ளை முயற்சி வழக்கில் 'ச.ரா' என எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கடப்பாறைக்கம்பி சம்பவ இடத்தில் போலீசாருக்கு கிடைத்தது. இந்த இன்ஷியலுக்கு உரியவர் தேசமாணிக்கத்தை சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ரகசியமாக துப்பு துலக்கி தேசமாணிக்கத்தை சேர்ந்தவர்களை மடக்கியுள்ளனர். வழக்குகளில் தொடர்புடைய ராஜகோபால் பிரபு உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். பிரபு திருச்சியில் பதுங்கியுள்ளாரா என விசாரணை நடக்கிறது.