/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சுரண்டை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிப்பு
/
சுரண்டை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிப்பு
ADDED : ஆக 30, 2011 12:03 AM
சுரண்டை : சுரண்டை காமராஜர் அரசு கலை கல்லூரியில் போதிய பேராசிரியர்களை நியமிக்க கோரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
சுரண்டை-ஆனைகுளம் ரோட்டில் காமராஜர் பெயரில் அரசு கலை கல்லூரி நிறுவப்பட்டது. புதிய இடத்தில் பணிகள் துவங்கி வேலை முடிய நாட்கள் ஆகும் என்பதால் தனியார் பள்ளி கட்டடத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த இடம் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு போதுமானதாக இல்லாததால் வகுப்புகள் காலை, மதியம் என்று இரண்டு ஷிப்ட் முறைப்படி பி.காம்., பி.எஸ்.ஸி., பி.பி.ஏ., போன்ற பட்டப்படிப்புகள் நடந்து வருகிறது.
தற்போது இக்கல்லூரிக்கு 40 பேராசிரியர்கள் தேவைப்படும் நிலையில் 6 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். தற்போது தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தேர்வில் வெற்றி பெறும் நோக்கோடும், மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கருதியும் கூடுதல் பேராசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி நேற்று காலை மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர். தகவல் அறிந்ததும் வீ.கே.புதூர் தாசில்தார் சுமங்கலி தலைமையில் மண்டல துணை தாசில்தார் சுதந்திரம், சுரண்டை இன்ஸ்பெக்டர் சங்கர்தேவ், வருவாய் ஆய்வாளர் அரவிந்த், விஏஓ அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர் பவுன் (எ) பத்திரகாளி, தலையாரிகள் கணேசன், முத்தையா முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இரண்டு நாட்களுக்குள் கூடுதல் பேராசிரியர்களை நியமிக்க ஏற்பாடு செய்யப்படுமென உறுதியளித்ததை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மதியத்திற்கு பின் வகுப்புகளுக்கு சென்றனர்.