/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம் தே.மு.தி.க., என்றும் உறுதுணையாக இருக்கும் : விஜயகாந்த்
/
கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம் தே.மு.தி.க., என்றும் உறுதுணையாக இருக்கும் : விஜயகாந்த்
கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம் தே.மு.தி.க., என்றும் உறுதுணையாக இருக்கும் : விஜயகாந்த்
கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம் தே.மு.தி.க., என்றும் உறுதுணையாக இருக்கும் : விஜயகாந்த்
ADDED : செப் 19, 2011 12:01 AM
ஏர்வாடி : 'கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்திற்கு தேமுதிக., என்றும் உறுதுணையாக இருக்கும்.
விரைவில் நல்ல முடிவு ஏற்படும்' என தேமுதிக., நிறுவன தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் நேற்று 8வது நாளாக சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத பந்தலில் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கூடன்குளத்தில் நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
மேலும் கூடன்குளம், இடிந்தகரை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு பெற்றோர்கள் மாணவ, மாணவிகளை அனுப்பாமல் இருந்து வருகின்றனர். மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. உண்ணாவிரத போராட்டத்தில் 128 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எதுவும் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பதால் மிகவும் சோர்வான நிலையில் தளர்ச்சியடைந்து வருகின்றனர். 128 பேரில் 27 பேர் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இவர்கள் இடிந்தகரை, கூடன்குளம் மற்றும் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிலை மிகவும் மோசமாக, கவலைக்கிடமாக இருப்பதாகவும், தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டால் உடல் நிலை மிகவும் மோசமடைய வாய்ப்புள்ளதாகவும் டாக்டர்கள் அவர்களிடம் தெரிவித்தனர். இந்நிலையில் இடிந்தகரையில் நேற்று 8வது நாளாக நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேமுதிக., நிறுவன தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார்.
உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விஜயகாந்த் பேசுகையில், ''மக்களின் உணர்வுகளை மதித்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதனை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். மக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த கூடாது. கூடன்குளத்தில் அணு உலை அமைக்கும் போதே பொதுமக்களிடம் அரசு கருத்து கேட்டிருக்க வேண்டும். அதனால் தான் இப்போது இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. தேமுதிக எம்எல்ஏ., மைக்கேல் ராயப்பன் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இப்போராட்டத்திற்கு தேமுதிக., என்றும் உறுதுணையாக இருக்கும். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்'' என்றார்.
பின் போராட்டக்குழுவினர் உண்ணாவிரத போராட்டம் குறித்தும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுவது குறித்தும் கோரிக்கை மனுவினை விஜயகாந்திடம் அளித்தனர். அதனை வாங்கி கொண்டு விரைவில் அரசிடம் பேசி நல்ல முடிவு தெரிவிப்பதாக கூறி சென்றார். 128 பேர் இருந்த உண்ணாவிரத போராட்டத்தில் ராதாபுரம் எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பனும் ஒருவர்.
அவர் போராட்டக்குழுவினர் கொடுத்த மனுவின் அடிப்படையில் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதால், அவரை சென்னைக்கு அழைத்திருப்பதால் உண்ணாவிரத போராட்டத்தை விலக்கி கொண்டு நேற்று மைக்கேல் ராயப்பன் சென்னைக்கு சென்றார். இதனால் 128 பேர் நடத்தி வந்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஒருவர் குறைந்துள்ளார். மேலும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் 27 பேரை தவிர்த்து தற்போது 100 பேர் உண்ணாவிரத பந்தலில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இவர்களிலும் பலர் மோசமான நிலையில்தான் இருக்கின்றனர். இதனிடையே கூடன்குளம், வைராவிகிணறு, உவரி பகுதிகளில் கஞ்சி தொட்டி திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது. உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடப்பதால் இடிந்தகரை மற்றும் சுற்றுப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.