ADDED : பிப் 29, 2024 02:20 AM
திருநெல்வேலி,:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் போராட்டம் நடத்த வணிகர் சங்க பேரமைப்பு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் நடந்தது. பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் கோவிந்தராஜூலு மற்றொரு பொதுச் செயலர் சதக்கத்துல்லா ஆண்டறிக்கை வாசித்தார்.
வணிகர் தின மாநாட்டை மதுரையில் மே ௫ம் தேதி நடத்த வேண்டும், வணிக உரிமம் பெறுவதற்கு கட்டட உரிமையாளர் சொத்து வரி ரசீது கட்டாயம் என அறிவித்துள்ளதை வாபஸ் பெற வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வணிக உரிமங்கள் புதுப்பிக்கும் நடைமுறைக்கான அரசாணை வெளியிட வேண்டும்,
விவசாயம், பூச்சி மருந்துகள், அரிசி, மைதா உணவு பொருட்கள், சூடத்திற்கான ஜிஎஸ்டி வரியை ௫ சதவீதமாக குறைக்க வேண்டும், மாறாந்தையில் சுங்க சாவடி கட்டண வரி விதிப்பை ரத்த செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறும் போது, ''மத்திய, மாநில அரசுகள் வணிகர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும்.
''நெல்லை மாநகராட்சியில் ஏற்கனவே கடை நடத்தி வந்தவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் முன்னுரிமை வழங்க வேண்டும்.
''ஜிஎஸ்டி வரி விதிப்பு குளறுபடிகளை நீக்க வேண்டும், மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டில்லியில் 10 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்கும் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.
