ADDED : செப் 05, 2026 11:21 PM
திருநெல்வேலி: முன்விரோதம் காரணமாக, கட்டட தொழிலாளி சந்தான பாலமுருகன், 26, என்பவரை தலை துண்டித்து கொலை செய்த கார்த்திக், 30, முத்தரசன், 32, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், பொட்டல்புதுாரை சேர்ந்த சந்தான பாலமுருகனுக்கு, மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, டூ - வீலரில் பொட்டல்புதுார் வேன் ஸ்டாண்ட் பகுதிக்கு சென்ற போது, மற்றொரு டூ - வீலரில் வந்த இருவர், சந்தான பாலமுருகனை அரிவாளால் வெட்டி, தலையை துண்டித்து கொலை செய்தனர்.
ஆழ்வார்குறிச்சி போலீசார், பொட்டல்புதுார் கார்த்திக், மருதப்புரம் முத்தரசன் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'கார்த்திக்கின் சகோதரியை முத்தரசன் திருமணம் செய்துள்ளதால், பொட்டல்புதுாருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, சந்தான பாலமுருகனுடன் முத்தரசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட முன்விரோதத்தால், சந்தான பாலமுருகனை இருவரும் கொலை செய்துள்ளனர்' என்றனர்.
