/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வல்லநாடு தாமிரபரணி ஆற்று பாலத்தில் அடிக்கடி ஓட்டை விழுவதால் 'திக்... திக்'
/
வல்லநாடு தாமிரபரணி ஆற்று பாலத்தில் அடிக்கடி ஓட்டை விழுவதால் 'திக்... திக்'
வல்லநாடு தாமிரபரணி ஆற்று பாலத்தில் அடிக்கடி ஓட்டை விழுவதால் 'திக்... திக்'
வல்லநாடு தாமிரபரணி ஆற்று பாலத்தில் அடிக்கடி ஓட்டை விழுவதால் 'திக்... திக்'
ADDED : ஜூலை 23, 2025 02:27 AM

திருநெல்வேலி:துாத்துக்குடி மாவட்டம், வல்லநாடு தாமிரபரணி ஆற்றின் மீதுள்ள பாலத்தில் அடிக்கடி ஓட்டை விழுவதாலும், துாண்கள் அரிப்புக்குள்ளாகி இருப்பதாலும், வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.
திருநெல்வேலி - துாத்துக்குடி 47 கி.மீ., நான்கு வழிச்சாலையில், வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலம் உள்ளது.
தற்போது நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட போது, 2013ல் புதிய பாலம் கட்டப்பட்டது. ஆனால், அந்த பாலம் முறையாக கட்டப்படவில்லை.
கடந்த 2017 நவம்பரில் முதல்முறையாக இந்த புதிய பாலத்தில் ஓட்டை விழுந்தது. இதற்காக, 108 நாட்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பணிகள் நடந்தன.
தொடர்ந்து, பலமுறை பாலத்தில் சேதங்கள் ஏற்பட்டன. ஓட்டைகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதுவரை, 20 முறைக்கு மேல் ஓட்டைகள் விழுந்து, பராமரிப்பு பணி நடந்துள்ளது. இருப்பினும், பாலம் அபாயகரமாகவே உள்ளது.
தற்போது பாலத்தில் ஓட்டை விழுந்து, ஒரு பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மற்றொரு பகுதி வழியாக வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது, சீராக செல்ல முடியாமல் தார் ஒருபுறமாக ஒதுங்கி வாகனங்கள் வழுக்கும் நிலை உள்ளது.
இதே பகுதியில் 100 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் அமைத்த ஆற்றுப்பாலம் இன்னமும் சிறு சேதம் கூட இல்லாமல் உள்ளது.
தொடர்ந்து, 8 ஆண்டுகளாக இரு மாதங்களுக்கு ஒருமுறை பாலம் சேதமடைந்து வருகிறது. இதுவரை இந்த பாலம் சீரமைப்பிற்காக மட்டுமே, 13 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
பாலத்தின் துாண்களும் அரிப்புக்குள்ளாகி வருவதால், வாகன ஓட்டிகள் பீதியடைந்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது பிரதமர் மோடி துாத்துக்குடி வருகைக்காக பாலத்தில் சீரமைப்பு பணி நடக்கிறது.
'பாலத்தின் நிலை குறித்து சி.ஆர்.ஆர்.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தார் பரவலை குறைத்து சாலையை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.