/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிருஷ்ணா நீரை சேமிக்க மாற்றுத் திட்டம் : பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு
/
கிருஷ்ணா நீரை சேமிக்க மாற்றுத் திட்டம் : பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு
கிருஷ்ணா நீரை சேமிக்க மாற்றுத் திட்டம் : பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு
கிருஷ்ணா நீரை சேமிக்க மாற்றுத் திட்டம் : பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூலை 14, 2011 10:40 PM
ஊத்துக்கோட்டை : ஆந்திர மாநிலத்தில் இருந்து பெறப்படும் கிருஷ்ணா நீரை முழுவதும் சேமித்து பயன்படுத்த, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி மாற்றுத் திட்டத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக - ஆந்திர மாநில அரசுகள் இடையே, 1983ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது.
ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் இருந்து சோமசீலா அணைக்கு வந்து அங்கிருந்து கண்டலேறு அணையில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் இங்கிருந்து ஒவ்வொரு ஆண்டும் 15 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தர வேண்டும். இதில் 3 டி.எம்.சி., நீர் சேதாரம் போக ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.,யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., நீர் தர வேண்டும். இதற்காக கண்டலேறு அணையில், தமிழக எல்லை வரை 152 கி.மீ. தொலைவிற்கு கால்வாய் அமைக்கும் பணி தொடர்ந்து, 13 ஆண்டுகளாக நடந்தது. பணிகள் முடிந்து 1996ம் ஆண்டு முதல் முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
துவக்கத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால், 10 நாட்கள் கடந்து பின்னர் தான் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட்டிற்கு வரும். கால்வாய்கள் ஆங்காங்கே சேதமடைந்தும், சிமென்ட் சிலாப்புகள் உடைந்ததால் தண்ணீர் பெருமளவு விரயமானது. இதையடுத்து, ஸ்ரீசத்யசாய்பாபா அறக்கட்டளை சார்பில் கண்டலேறு அணையில் இருந்து கால்வாய்கள், நவீன தொழில்நுட்பத்துடன் சீரமைக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது மூன்று நாளில் தமிழக எல்லையை அடைகிறது.
நமக்கு கிடைக்கும் கிருஷ்ணா நீரை பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளில் சேமித்து சுத்திகரிக்கப்பட்டு பின்னர் சென்னை மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்தப்படி, முழுஅளவு கிருஷ்ணா நீர் அவர்கள் தரவில்லை. போதுமான அளவு நீரை சேமிக்க முடியாமல் வீணாக கடலுக்கு அனுப்பும் நிலை உள்ளது. இந்நிலையில், முழுஅளவு கிருஷ்ணா நீரை சேமிக்க வசதியாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் கிருஷ்ணா நீரை, முழுஅளவு வாங்கி சேமிக்கும் முயற்சியில் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான ஆய்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் முயற்சியாக தேர்வாய், கண்ணன்கோட்டை, கரடிப்புத்தூர் ஆகிய ஏரிகளை ஒருங்கிணைத்து நீர்த்தேக்கம் அமைப்பது, தேர்வாய் ஏரி 113 ஏக்கர், கண்ணன்கோட்டை ஏரி 713 ஏக்கர், கரடிப்புத்தூர் ஏரி 110 ஏக்கர் பரப்பளவு உள்ளது. இந்த ஏரிகளை ஒன்றாக்கினால் இரண்டு டி.எம்.சி., வரை நீரை சேமிக்க முடியும். பின்னர் திருக்கண்டலம், ராமஞ்சேரி ஏரிகளிலும் கிருஷ்ணா நீரை அனுப்பி தேக்கி வைப்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
இது குறித்து தமிழக பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும் போது, ''தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், கிருஷ்ணா நீரை முழுவதும் சேமித்து பயன்படுத்த மாற்றுத் திட்டம் குறித்து கேட்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள தேர்வாய், கண்ணன்கோட்டை, கரடிப்புத்தூர் ஆகிய ஏரிகளை ஒருங்கிணைத்து நீர்த்தேக்கம் கட்டி அதில் கிருஷ்ணா நீரை சேமிக்கும் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதற்காக நிலம் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. பணிகள் முடிந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும்,'' என்றனர். ஏரிகளையும், நீர் ஆதாரங்களையும் பாதுகாத்தாலே போதும். விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பஞ்சம் வர வாய்ப்பில்லாமல் போய்விடும்.
புதிய நீர் தேக்கங்கள் தேவை : ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, சாய்கங்கா கால்வாய் மூலம் தமிழகத்தில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு கொண்டு வரப்படும் கிருஷ்ணா நதி நீர் சேமிக்க முடியாமல், யாருக்கும் பயனின்றி கடலுக்குப் போய் வீணாகிறது. ஆந்திராவில் இருந்து பெறப்படும் நீர், பூண்டி நீர்த்தேக்கத்தில் 3. 2 டி.எம்.சி., புழல் ஏரியில் 3.3 டி.எம்.சி., செம்பரம்பாக்கம் ஏரியில் 3.6 டி.எம்.சி., மற்றும் சோழவரம் ஏரியில் ஒரு டி.எம்.சி.,க்கும் குறைவாகவே நம்மால் சேமிக்க முடிகிறது.
இம்மூன்று ஏரிகளிலும், மொத்தமே 11 டி.எம்.சி., நீர் மட்டுமே சேமிக்க முடியும். ஆனால், ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆண்டுதோறும் நாம் பெற வேண்டிய நீரின் அளவு 12 டி.எம்.சி., மழை போன்ற பல்வேறு காரணங்களால் போதுமான நீரை ஏரிகளில் பாதுகாக்க முடியாமல் போகிறது. மேலும், ஆந்திராவில் இருந்து 12 டி.எம்.சி.,நீர் பெறவும் முடியவில்லை. எனவே தான் புதிய நீர்த்தேக்கங்கள் தேவைப்படுகிறது.
எம்.யுவராஜ்

