ADDED : ஆக 24, 2024 09:42 PM
பொன்னேரி:தமிழகத்தில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய விலை பொருட்கள், புறநகர் ரயில்களில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படுகிறது.
இது தொடர்பாக வந்த புகார்களை தொடர்ந்து, நேற்று பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்க்கர் பிரபு தலைமையில் அத்துறையினர், ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டைக்கு செல்லும் புறநகர் ரயிலில் சோதனை மேற்கொண்டனர்.
அதில் பயணியரின் இருக்கைகளுக்கு கீழ்பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
மீஞ்சூர் இருந்து பொன்னேரி ரயில் நிலையம் வரை புறநகர் ரயிலில் பயணித்து, மொத்தம், 38 மூட்டைகளில், 1440 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றினர். அவற்றை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.
தமிழக ரேஷன் அரிசியை ஆந்திர மாநிலத்திற்கு கடத்துபவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசி கடத்திலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.