/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தகுதி இல்லாத 17 பள்ளி வாகனங்கள் அனுமதி நிராகரிப்பு:கூட்டு தணிக்கையில் கலெக்டர் அதிரடி உத்தரவு
/
தகுதி இல்லாத 17 பள்ளி வாகனங்கள் அனுமதி நிராகரிப்பு:கூட்டு தணிக்கையில் கலெக்டர் அதிரடி உத்தரவு
தகுதி இல்லாத 17 பள்ளி வாகனங்கள் அனுமதி நிராகரிப்பு:கூட்டு தணிக்கையில் கலெக்டர் அதிரடி உத்தரவு
தகுதி இல்லாத 17 பள்ளி வாகனங்கள் அனுமதி நிராகரிப்பு:கூட்டு தணிக்கையில் கலெக்டர் அதிரடி உத்தரவு
ADDED : மே 25, 2024 11:59 PM

திருவள்ளூர்:திருவள்ளுர் மாவட்டத்தில் உரிய பாதுகாப்பு வசதி இல்லாத, 17 பள்ளி வாகனங்களுக்கான அனுமதியை நிராகரித்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பதையொட்டி, திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக ஆயுத படை மைதானத்தில் நேற்று முன்தினம் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு பணி நடந்தது.
திருவள்ளுர், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட 27 பள்ளிகளைச் சேர்ந்த 105 வாகனங்களை சிறப்புக் கூட்டு தணிக்கைக்கு உட்படுத்தி கூட்டாய்வு செய்யும் பணி நடந்தது.
கலெக்டர் த.பிரபுசங்கர், காவல் கண்காணிப்பளார் ஸ்ரீநிவாச பெருமாள் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், பள்ளி வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து பள்ளி நிர்வாகம், வாகன ஓட்டுனர் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு ஆலோசனை கலெக்டர் வழங்கினார்.
பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், பள்ளி பேருந்துகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் பயணிக்க கூடிய இந்த பள்ளி பேருந்துகளுக்கு பல்வேறு விதிமுறைகள் உண்டு. சரியாக கடைபிடிக்கப்படுகிறதா, இல்லையா என்பதை ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் மாவட்ட வாரியாக ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த பள்ளி பேருந்துகளை பள்ளிகள்
ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாகவே ஆய்வு செய்வது வழக்கம். அதனடிப்படையில், திருவள்ளுர் மாவட்டத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
திருவள்ளுர், ஊத்துக்கோட்டை வட்டத்தில் இருந்து 27 பள்ளிகளில் 105 வாகனங்கள் வட்டார அளவிலான ஆய்வுகளுக்கு வரப்பட்டது. அதில், 60 வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
சிறு குறைபாடு உள்ள 27 வாகனங்கள் குறைபாடுகள் சரி செய்யபட்டபின் தகுதி சான்றிதழ் வழங்கப்படும். அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதி இல்லாத 17 வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் நிராகரிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஓட்டுநர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. பின், ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த கையேட்டை கலெக்டர் வழங்கினார்.
தீயணைப்பான் கருவிகளை முறையாக கையாளுவது குறித்து பள்ளி வாகன ஓட்டுனர்களுகளிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தீயணைப்பு துறை சார்பாக அளிக்கப்பட்ட செய்முறை பயிற்சியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதன்மை கல்வி அலுவலர் ரவிசந்திரன், வருவாய் கோட்டாட்சியர்-திருவள்ளுர், கற்பகம், வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன், தீயணைப்பு துறை நிலைய அலுவலர்கள் மாவீரராகவன், அழகர்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* திருத்தணி கோட்டத்தில் 36 பிரைமரி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளி வாகனங்களை ஆண்டுக்கொரு முறை, வருவாய் கோட்டாட்சியர், டி.எஸ்.பி., மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்து, அரசு அறிவித்த அனைத்து வசதிகள் இருந்தால் வாகனங்கள் தொடர்ந்து இயக்குவதற்கு தகுதி அனுமதி சான்று வழங்கப்படும்.
சென்னை--- - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தளபதி.கே விநாயகம் கல்வி குழும வளாகத்தில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தமிழ்மாறன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி, திருத்தணி தாசில்தார் மதியழகன், திருத்தணி போக்குவரத்து ஆய்வாளர் ஞானதி, திருத்தணி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளி வாகனங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது, வேகக் கட்டுப்பாடு கருவி, முதலுதவி பெட்டி, அவசர வழி, மாணவர்கள் அமரும் இருக்கைகள் மற்றும் ஏறி, இறங்கும் படிகள் போன்ற அடிப்படை வசதிகள் ஒரு வாகனத்திலும் முழுமையாக இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்க முடியாது, மேற்கண்ட குறைகளை வாகனங்களில் நிவர்த்தி செய்த பின் மீண்டும் ஆய்வு நடத்தி சான்று வழங்கப்படும் என கூறி அதிகாரிகள் சென்றனர்.