/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடியில் 5.5 செ.மீ., கொட்டிய மழை
/
கும்மிடியில் 5.5 செ.மீ., கொட்டிய மழை
ADDED : செப் 07, 2024 07:41 AM

கும்மிடிப்பூண்டி : மத்தியமேற்கு மற்றும் ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியால், நேற்று வட தமிழக மாவட்டங்களில் மழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை கனமழை பெய்தது. அதன் மூலம், கும்மிடிப்பூண்டியில், 5.5 செ.மீ., மழை பதிவானது.
கனமழையால், சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னஓபுளாபுரம் பகுதியில், மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி, சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது.
இதனால், கனரக வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்தபடி அப்பகுதியை சிரமத்துடன் கடந்து செல்கின்றன. மேலும், பெத்திக்குப்பம், கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலை, கவரைப்பேட்டை, தச்சூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியதுடன், சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.
குளமாகும் நெடுஞ்சாலை
சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னஓபுளாபுரம் பகுதியில், எப்போது மழை பெய்தாலும் தேசிய நெடுஞ்சாலையிலும் அதனை ஒட்டியுள்ள இணைப்பு சாலையில் குளம் போல் மழைநீர் தேங்குவது வழக்கம்.
அப்பகுதியில் மழைநீர் வடிகால் வசதியில் உள்ள சிக்கலால், ஆண்டுதோறும் மழைக்காலங்களில், அப்பகுதியில் போக்குவரத்துகடுமையாக பாதிக்கப்படுகிறது.
கனமழை காலங்களில், போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது.
இது குறித்து பகுதிவாசி ஒருவர் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட இணைப்பு சாலை மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டது.
அதனால், வடிகால்வாய் இருந்தும் தண்ணீர் வடிந்து செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இணைப்பு சாலையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது' என்றார்.