/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
துணை மின் நிலையத்தில் தீ விபத்து 2 மணி நேர மின் தடையால் அவதி
/
துணை மின் நிலையத்தில் தீ விபத்து 2 மணி நேர மின் தடையால் அவதி
துணை மின் நிலையத்தில் தீ விபத்து 2 மணி நேர மின் தடையால் அவதி
துணை மின் நிலையத்தில் தீ விபத்து 2 மணி நேர மின் தடையால் அவதி
ADDED : மே 12, 2024 09:32 PM

புழல்: சென்னை புழல் துணை மின் நிலையத்தில் இருந்து, புழல், கதிர்வேடு, காவாங்கரை, செங்குன்றம், சூரப்பட்டு, கொளத்துார் சுற்றுவட்டாரங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
குறிப்பாக, அந்த அலுவலகத்தின் வாயிலாக, சென்னை மத்திய சிறை, சென்னை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், வேளாண்மை துறை அலுவலகம், மாநகராட்சி மருத்துவமனைகள், அரசு தனியார் பள்ளி மற்றும் நிறுவனங்கள் மின் வினியோகம் பெறுகின்றன.
அதனால், இந்த துணை மின் நிலைய அலுவலகத்தின் மூலம், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர் இணைப்பில் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று காலை 7:00 மணி அளவில், திடீரென மின் தடை ஏற்பட்டது. அப்போது, அங்குள்ள மின் மாற்றிகளில் ஒன்று, மின் பகிர்மான வழித்தட, 'பீடரில்' ஏற்பட்ட மின் அழுத்தம் காரணமாக வெடித்து, தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
நேற்று விடுமுறை என்பதால், போதிய பணியாளர்கள் இல்லை. இரவு பணியில் இருந்த சிலர், செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் வீரர்கள், அங்கு சென்று தீயை அணைத்தனர். அதன்பின் தகவல் அறிந்து மின் வாரிய அலுவலர்கள், தீயில் சேதமடைந்த மின் மாற்றியின் வழித்தடத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதனால், 2 மணி நேரம் நீடித்த மின் தடையால், விடுமுறை நாளில் அயர்ந்து துாங்கிய மக்கள், துாக்கம் இழந்து அதிருப்தி அடைந்தனர். கோடையில் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், போதிய கண்காணிப்பு, பராமரிப்பு இன்றி, தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.