/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீணான இலவச வேட்டி, சேலை ஊத்துக்கோட்டையில் அவலம்
/
வீணான இலவச வேட்டி, சேலை ஊத்துக்கோட்டையில் அவலம்
ADDED : ஆக 31, 2024 01:02 AM

ஊத்துக்கோட்டை:தமிழக அரசு கடந்தாண்டு வழங்கிய பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகள் மூட்டை, மூட்டையாக தாசில்தார் தங்கும் குடியிருப்பு முன் சிதறி கிடப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில், 100 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில், 119 ரேஷன் கடைகளில், 46,783 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு ஒரு புடவை, ஒரு வேட்டி ஆண்டுதோறும் பொங்கலுக்கு இலவசமாக வழங்கப்படும்.
கடந்தாண்டு ஊத்துக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு, 12,500 வேட்டி மற்றும் சேலைகள் வந்தன. இதை ஒவ்வொரு பகுதிக்கு பிரித்து வழங்கப்பட்டதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று காலை ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில், தாசில்தார் தங்கும் குடியிருப்பு முன் மூட்டை, மூட்டையாக வேட்டி, சேலைகள் கிடந்தன. சில சேலைகள் கிழிந்த நிலையில் சிதறி கிடந்தன. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்தாண்டு வேட்டி, சேலை தேவைக்கு ஏற்ப வராமல் குறைவாக வந்ததால், பல இடங்களில் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து தகராறில் ஈடுபட்டனர். இதனால் சில இடங்களில் வேட்டி, சேலை வழங்காமல் அப்படியே இருப்பு வைக்கப்பட்டது. அந்த மூட்டைகள் தாசில்தார் தங்கும் அறைக்கு முன் இருந்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இலவசமாக ஏழை, எளிய மக்களுக்கு வழங்க வேண்டிய வேட்டி, சேலையை வழங்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.