/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆடி மாதம் பிறந்தாச்சு... அம்மன் கோவில்களில் கோலாகலம்
/
ஆடி மாதம் பிறந்தாச்சு... அம்மன் கோவில்களில் கோலாகலம்
ஆடி மாதம் பிறந்தாச்சு... அம்மன் கோவில்களில் கோலாகலம்
ஆடி மாதம் பிறந்தாச்சு... அம்மன் கோவில்களில் கோலாகலம்
ADDED : ஜூலை 18, 2024 01:03 AM

ஆடி மாதம் பிறந்தாலே அம்மன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டு விடும். நேற்று ஆடி மாதம் முதல் தேதியை ஒட்டி, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
கார், வேன், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால், வழக்கம் போல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் பொங்கல் வைத்தும், வேப்ப இலை ஆடை அணிந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதிகளவு பக்தர்கள் குவிந்ததால், மூலவர் அம்மனை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
கடந்த 12ம் தேதி பவானியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஊத்துக்கோட்டை கிராம தேவதை செல்லியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், எல்லையம்மன் கோவில், சப்த கன்னியர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான அம்மன் கோவில்களில் ஆடி மாதம் முதல் நாளை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
திருத்தணி
திருத்தணி முருகன் கோவிலில், வரும் 29ம் தேதி ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.
நேற்று ஆடி மாதம் முதல் நாள் மற்றும் அரசு விடுமுறை நாள் என்பதால், வழக்கத்திற்கு மாறாக மலைக்கோவிலில், காலை 6:00 மணி முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசிக்க தேர்வீதியில் குவிந்தனர்.
சில பக்தர்கள் காவடிகளுடன் வந்து முருகப்பெருமானை தரிசித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி நிறைவேற்றினர்.
பக்தர்கள் பொதுவழியில், மூன்றரை நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் முருகப்பெருமானை வழிபட்டனர். அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.
முன்னதாக, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கிரீடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
வண்ணம் தீட்டும் பணி
ஆடிக் கிருத்திகையையொட்டி, வரும் 28ம் தேதி ஆடி பரணி, 29ம் தேதி ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பம், 30ம் தேதி இரண்டாம் நாள் தெப்பம், 31ம் தேதி மூன்றாம் நாள் தெப்பத்துடன் இந்தாண்டிற்கான ஆடிக்கிருத்திகை விழா நிறைவடைகிறது.
இதைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம், மலைக்கோவில் முழுதும் வண்ணம் தீட்டும் பணிகள் மற்றும் வண்ண விளக்குகள் அலங்கரிப்பதற்கான பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.
- நமது நிருபர் குழு -