திருத்தணியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., அறிவுறுத்தல்
திருத்தணியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., அறிவுறுத்தல்
ADDED : மே 29, 2026 11:42 PM
திருத்தணி, மே 30–
“திருத்தணி நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை, போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும்,” என, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., அரி, நேற்று ஆணையரிடம் அறிவுறுத்தினார்.
திருத்தணி சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அரி வெற்றி பெற்றார். நேற்று, திடீரென எம்.எல்.ஏ., அரி, முதல் முறையாக நகராட்சி அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, நகராட்சி ஆணையர் கன்னியப்பன், பொறியாளர் செல்வகுமார் ஆகியோர், எம்.எல்.ஏ., அரியிடம் நகராட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து தெரிவித்தனர்.
பின், எம்.எல்.ஏ., அரி கூறியதாவது:
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக திருப்பாற்கடல் கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யாததால், நகரில் கடும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதை உடனடியாக தீர்க்க வேண்டும்.
நகராட்சி அலுவலகத்தில், ஆதார் சேவை மையம் குறுகிய அறையில் இயங்கி வருவதால், மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். ஆதார் சேவை மையத்திற்கு தனியாக அனைத்து வசதிகளுடன் கூடிய அறை ஏற்படுத்த வேண்டும்.
அதே போல், ரயில் நிலையம் எதிரே இயங்கி வரும் அம்மா உணவகத்தின் மேல், குடிநீர் தொட்டி மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளதால், குரங்குகள் தொட்டியில் குதித்து விளையாடுகின்றன.
அந்த தண்ணீரை, அம்மா உணவகத்திற்கு பயன்படுத்துவதாக, மக்கள் என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர். உடனடியாக, குடிநீர் தொட்டியை மூடி, சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். நகராட்சியில், அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
