/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சைபர் குற்றம் குறித்து திருவூரில் விழிப்புணர்வு
/
சைபர் குற்றம் குறித்து திருவூரில் விழிப்புணர்வு
ADDED : பிப் 11, 2025 12:23 AM

திருவூர், சைபர் கிரைம் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, 'ஆன்லைன்' வாயிலாக இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் பண மோசடி நடக்கிறது.
இதுகுறித்து, ஆவடி மாநகர காவல் ஆணையர் கி.சங்கர் உத்தரவுப்படி, ஆவடி காவல் ஆணையரக இணைய குற்றப்பிரிவு போலீசார், பொதுமக்களிடம் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் வாயிலாக துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
செவ்வாப்பேட்டை காவல் நிலைய போலீசார், ஜெயா கல்லுாரி மாணவர்களுடன் இணைந்து, நேற்று, செவ்வாப்பேட்டைரோடு ரயில் நிலையம் மற்றும் திருவூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களிலும் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
அந்த துண்டு பிரசுரத்தில், அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்கள் வங்கி தொடர்பான விபரங்களை தெரிவிக்க வேண்டாம். 'ஆன்லைன்' வேலை என, போலியான லிங்கை நம்பி ஏமாற வேண்டாம்.
மொபைல்போனில் உங்களது போட்டோவை வைக்க வேண்டாம். இதனால் உங்களை படங்களை சிலர் மார்பிங் செய்து, மிரட்டும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. 'ட்ரூ காலர் அப்பிளிகேஷனை' உங்களது, 'ஜி.பே., போன் பே' போன்ற அப்பிளிகேஷன் உள்ள மொபைல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்பன உட்பட பல விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
மேற்கண்ட குற்றங்கள் ஏதேனும் நடந்திருந்தால், http://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
இணையதளம் வாயிலாக பண இழப்பு ஏற்பட்டால் 1930 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம் எனவும் ஆவடி காவல் சைபர் குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

