/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீரின்றி வறண்ட பூண்டி நீர்த்தேக்கம்
/
நீரின்றி வறண்ட பூண்டி நீர்த்தேக்கம்
ADDED : ஜூன் 27, 2024 01:20 AM

திருவள்ளூர்:சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி நீர்த்தேக்கம், தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக பூண்டி, கொசஸ்தலை ஆற்றின் அருகில் நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இதில், 3.23 டி.எம்.சி., தண்ணீர் சேகரிக்க முடியும்.
இங்கு, மழைக்காலத்தில் சேகரமாகும் தண்ணீர் மற்றும் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நீர் ஆகியவை சேகரிக்கப்பட்டு, சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, கால்வாய் வழியாக புழல் மற்றும் சோழவரம் ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது, அவ்வப்போது கோடை மழை பெய்தாலும், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு மழைநீர் வரத்து குறைவாகவே உள்ளது. நீர்த்தேக்கத்தில் தற்போது, 00.72 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்தாண்டு, 1.485 டி.எம்.சி., தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொசஸ்தலை ஆற்று நீர், நீர்த்தேக்கத்தை சுற்றிலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் கிருஷ்ணா நீர் ஆகியவற்றால், எப்போதும் கடல்போல் காட்சியளிக்கும் பூண்டி நீர்த்தேக்கம், தற்போது சுற்றிலும் தண்ணீர் வற்றி வறண்டு காணப்படுகிறது.
வெயில் காரணமாக தண்ணீரும் ஆவியாகி வருவதால், இருக்கும் தண்ணீரை சென்னை நகர குடிநீர் தேவைக்காக தினமும், 27 கன அடி வீதம், பிரதான மற்றும் பேபி கால்வாய் வாயிலாக அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது, நீர்த்தேக்கத்தின் மதகு அருகில் தண்ணீர் முற்றிலும் வறண்டு, தரை பாளம் பாளமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு செல்லும் தண்ணீர் சிறு ஓடை போல் காட்சியளிக்கிறது. பிற இடங்கள் வறண்டு, பாலைவனம் போல் மாறிவிட்டது.
மழை பெய்தால் அல்லது கிருஷ்ணா நீர் வரத்து கிடைத்தால் மட்டுமே, பூண்டி நீர்த்தேக்கம் புத்துயிர் பெறும். இதனால், சென்னை நகரவாசிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.