/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொசஸ்தலை ஆற்றில் மேம்பாலப் பணி விறுவிறு:நெமிலி அகரம் - மேல்விளாகம் பகுதிவாசிகள் மகிழ்ச்சி
/
கொசஸ்தலை ஆற்றில் மேம்பாலப் பணி விறுவிறு:நெமிலி அகரம் - மேல்விளாகம் பகுதிவாசிகள் மகிழ்ச்சி
கொசஸ்தலை ஆற்றில் மேம்பாலப் பணி விறுவிறு:நெமிலி அகரம் - மேல்விளாகம் பகுதிவாசிகள் மகிழ்ச்சி
கொசஸ்தலை ஆற்றில் மேம்பாலப் பணி விறுவிறு:நெமிலி அகரம் - மேல்விளாகம் பகுதிவாசிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 30, 2024 12:38 AM

திருவள்ளூர்:நெமிலி அகரம் மற்றும் சுற்றியுள்ள, எட்டு கிராமங்கள் மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்கால், கொசஸ்தலை ஆற்றை கடக்க சிரமப்பட்டு வந்தனர். கிராம மக்களுக்காக, 13.69 கோடி ரூபாய் மதிப்பில், புதிய மேம்பாலம் கட்டும் பணி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது, நெமிலி அகரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு அருகில், நெமிலி அகரம் காலனி, கீழ்விளாகம் கிராமம் மற்றும் காலனி, மேல்விளாகம் கிராமம் மற்றும் காலனி, கலியனுார் கிராமம் மற்றும் காலனி உள்ளிட்ட எட்டு கிராமங்கள் அமைந்து உள்ளன.
இந்த கிராமங்களில், 2,000த்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள், உயர் கல்வி பயிலவும், வேலை, மருத்துவ தேவை, அத்தியாவசிய பொருட்கள் வாங்க திருவள்ளூர் செல்ல வேண்டும்.
வெள்ளத்தால் பாதிப்பு
இதற்காக, இந்த கிராம மக்கள், நெமிலி அகரம் காலனியில் இருந்து, கொசஸ்தலை ஆற்றில் உள்ள, தரைப்பாலம் வழியாக விடையூர் வந்து, அங்கிருந்து திருவள்ளூர் செல்கின்றனர்.
இந்நிலையில், ஒவ்வொரு பருவமழை காலங்களில், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதும், அப்போது இந்த தரைப்பாலம் உடைப்பு ஏற்பட்டு விடுவதும் வாடிக்கையாகி விட்டது.
அந்த சமயத்தில், ஆற்றைக் கடக்க முடியாமல், பொதுமக்களும், மாணவ - மாணவியரும், கடும் சிரமப்படுகின்றனர். இதனால், விடையூரில் உள்ள அரசு பள்ளிக்கு செல்வோரும், திருவள்ளூர் செல்வோரும், தங்கள் கிராமங்களில் இருந்து, நார்த்தவாடா, கூடல்வாடி வழியாக மஞ்சாங்குப்பம், பட்டரைபெரும்புதுார், கனகவல்லிபுரம் வந்து 16 கி.மீ., சுற்றி வரவேண்டி உள்ளது.
இதனால், மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர், ஆபத்தான முறையில், கொசஸ்தலை ஆற்றில் ஓடும் வெள்ளத்தை பொருட்படுத்தாமல், கடந்து வருகின்றனர்.
இதையடுத்து, மேல்விளாகம் காலனியில் இருந்து கிராம சாலைக்கு செல்லும் வகையில், கொசஸ்தலை ஆற்றில் மேம்பாலம் கட்ட வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். ஊரக வளர்ச்சி துறையினர் கொசஸ்தலை ஆற்றில் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதை ஏற்று, 'நபார்டு' திட்டத்தில், 13 லட்சத்து 69 ஆயிரத்து 48 ஆயிரம் ரூபாய், புதிய மேம்பாலம் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலையில் புதிய மேம்பால பணிக்கு பூமி பூஜை நடந்தது. தற்போது, மேம்பால பணிக்கான பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. ஆற்றின் குறுக்கே துாண்கள் அமைக்க, இரும்பு கம்பி நடப்பட்டு, கான்கிரீட் சுவர் எழுப்பும் பணி நடந்து வருகிறது.
இப்பணி, 18 மாதத்தில் நிறைவடையும் வகையில் முழுவீச்சில் நடந்து வருகிறது. எதிர்வரும் மழை காலத்திற்குள் பாலப்பணி ஓரளவு நிறைவு பெறும் வகையில், பணி நடைபெற்று வருவதாக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறையினர் தெரிவித்தனர்.
18 மாதத்தில் நிறைவு
மேல்விளாகம் காலனி - கிராம சாலையை இணைக்கும் வகையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, 13.68 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டப்பட உள்ள மேம்பாலத்தின் நீளம் 148.8 மீட்டர். இதற்காக, ஆற்றில் 40 துாண்கள் அமைக்கப்பட உள்ளன. மேம்பாலத்தின் அகலம் 8.50 மீட்டர். பாலத்தின் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைத்து, போக்குவரத்துக்காக, 7.50 மீட்டர் அகல சாலை அமைக்கப்படும். இப்பாலப்பணி, 18 மாதத்தில் நிறைவு பெற்று, மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இப்பாலம் நிறைவு பெற்றதும், கிராம மக்கள் 2,000த்துக்கு மேற்பட்டோர் மற்றும் இப்பாலம் வழியாக, செல்வோர் 10,000த்துக்கும் மேற்பட்டோருக்கு பயனுள்ளதாக அமையும்.
சுலோக்சனா மோகன்ராவ்,
ஒன்றிய கவுன்சிலர், பாண்டூர்.