/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டி மதகு 'ஷட்டர்' சீரமைப்பு பணி துவக்கம்
/
பூண்டி மதகு 'ஷட்டர்' சீரமைப்பு பணி துவக்கம்
ADDED : மே 29, 2024 12:31 AM

திருவள்ளூர்:பூண்டி நீர்த்தேக்கத்தின் உபரி நீர் வெளியேற அமைக்கப்பட்ட, 16 மதகு 'ஷட்டர்' சீரமைப்பு பணி துவங்கி உள்ளது.
சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் கொசஸ்தலை ஆறு நடுவில், சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் கடந்த 1944ம் ஆண்டு கட்டப்பட்டது.
நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு, 3,231 மில்லியன் கன அடி. இங்கு, கொசஸ்தலை ஆறு மற்றும் கிருஷ்ணா நீர் ஆகியவற்றை கொண்டு வரப்பட்டு, தேக்கி வைக்கப்படுகிறது. பின், தண்ணீர், இணைப்பு கால்வாய் மற்றும் பேபி கால்வாய் மூலம், சென்னை புழல் மற்றும் சோழவரம் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சுத்திகரிக்கப்பட்ட பின், சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக வினியோகிக்கப்படுகிறது.
உபரி நீர் வெளியேறும் வகையில், 800 நீளம், 50 அடி உயரத்தில், 16 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. முறையாக மதகு 'ஷட்டர்களை' பராமரிக்காததால், நீர்த்தேக்கத்தில் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. பலமுறை பொதுப்பணித்துறையினர் - நீர்வள ஆதாரத்துறையினர், பல கோடி ரூபாய் ஒதுக்கியும் இதுவரை, முழுமையாக மதகின் 'ஷட்டர்களை' சீரமைக்கவில்லை.
மழை காலத்தில், உபரி நீர், 'ஷட்டர்' வழியாக பெருமளவில் வெளியேறி வருகிறது. அவ்வாறு மழைநீர் வெளியேறாமல் இருக்க, இரண்டு அவசர கால ஷட்டர் அமைக்கும் பணி, ஐந்து ஆண்டுகளுக்கு முன், 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், அவைகள் பொறுத்தப்படாமல், துருப்பிடித்து வீணாகி வருகிறது.
இந்நிலையில், 16 மதகு 'ஷட்டர்களை' ரசாயன பவுடர் வாயிலாக, துரு அகற்றும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும், அவசர கால ஷட்டர்களுக்கும், 'பெயின்ட்' அடிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
மழை காலம் துவங்குவதற்குள் ஷட்டர்களில் உள்ள துரு அனைத்தும் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்படும்; மேலும், அவசர கால ஷட்டர்களையும், தயார் படுத்தி, சேதமடைந்த ஷட்டர்களும் மாற்றப்படும் என, பொதுப்பணித் துறை-நீர்வள ஆதார துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.