/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கஞ்சா வியாபாரி மனைவியிடம் பணம் கேட்டு போலீஸ் மிரட்டல்?
/
கஞ்சா வியாபாரி மனைவியிடம் பணம் கேட்டு போலீஸ் மிரட்டல்?
கஞ்சா வியாபாரி மனைவியிடம் பணம் கேட்டு போலீஸ் மிரட்டல்?
கஞ்சா வியாபாரி மனைவியிடம் பணம் கேட்டு போலீஸ் மிரட்டல்?
ADDED : மார் 04, 2025 01:00 AM
திருத்தணி, தமிழக ---- ஆந்திர எல்லையில் பொன்பாடி சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இப்பகுதியில், திருத்தணி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம், 8ம் தேதி, திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்தில், ஆந்திர மாநிலம் கார்வெட் நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் 25, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஸ்வாதிகா, 20 ஆகிய இருவரும், 10 கிலோ கஞ்சா கடத்தி வந்தபோது, அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட சரவணனின் மனைவி கீதா, 21 என்பவர், தனது கணவரை ஜாமினில் எடுக்க வழக்கறிஞர்கள் வாயிலாக திருத்தணி மதுவிலக்கு போலீஸ் நிலையத்தை அணுகியுள்ளார்.
அப்போது, இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் கான்ஸ்டபிள் பெருமாள் ஆகியோர், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சரவணன் மற்றும் ஸ்வாதிகாவை, புழல் சிறைக்கு அழைத்துச் செல்ல வாகனத்திற்கு 5,000 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கூகுள்பே வாயிலாக 2,000 ரூபாயை ஸ்வாதிகா அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், மீதி பணத்தை அனுப்பி வைக்குமாறு கீதாவிடம் மொபைல் போனில் காவலர் பெருமாள் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். தற்போது கையில் பணம் இல்லை என்றும், விரைவில் அனுப்புவதாகவும் கீதா தெரிவித்துள்ளார்.
'வழக்கறிஞர்களுக்கு கொடுக்க பணம் உள்ளது; எங்களுக்கு கொடுக்க இல்லையா... எப்படி உனது கணவருக்கு ஜாமீன் கிடைக்கிறது என்று பார்க்கிறேன்' என, காவலர் பெருமாள் மிரட்டியுள்ளார். இது தொடர்பான ஆடியோ பரவி வருகிறது.