/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் 'தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி புகார்
/
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் 'தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி புகார்
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் 'தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி புகார்
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் 'தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி புகார்
ADDED : மார் 15, 2025 02:21 AM

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் நேற்று கோட்டாட்சியர் தீபா தலைமையில் நேற்று நடந்தது. இதில், வருவாய், வேளாண், ஊரக வளர்ச்சி, பொதுப்பணித்துறை உட்பட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 20க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக்கள் வழங்கி, தங்களது புகார்களை தெரிவித்தனர். அதன்பின் கோட்டாட்சியர், துறை அதிகாரிகளிடம் புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆர்.கே.பேட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய மூன்று ஒன்றிய விவசாயிகள், ஏரிகளின் மதகுகள் பழுது, ஏரி தண்ணீர் விவசாய நிலங்களில் செல்வதால் பயிரிட முடியவில்லை. எனவே, ஏரி உபரி கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் வேணுகோபால் பேசியதாவது:
வருவாய் கோட்டத்தில் பெரும்பாலான ஏரிகளில் நீர்வரத்து கால்வாய்கள் புதைந்தும், ஆக்கிரமிப்பில் சிக்கியும் உள்ளன. இது தொடர்பாக, நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நொச்சிலி, அத்திமாஞ்சேரிபேட்டை வழியாக கிராம சாலைகளில் டாரஸ் லாரிகள் அதிக பாரத்துடன் கிராவல் மண், ஜல்லிக் கற்களை ஏற்றிக் கொண்டு, அதிவேகமாக செல்வதால் விபத்து பயத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
அதேபோல், கடந்த 7ம் தேதி கே.ஜி.கண்டிகையில் அரசு பேருந்து மீது டாரஸ் லாரி மோதி, ஐந்து பேர் பலியான சம்பவத்திற்கு நெடுஞ்சாலை துறையே காரணம். இதை, சம்பவம் நடக்கும் முன்பே 'தினமலர்' நாளிதழ், 'சாலை விரிவாக்க பணிகள், தடுப்புகள், அறிவிப்பு பலகை இல்லாமல் நடந்து வருகிறது' என சுட்டிக்காட்டியது.
ஆனால், நெடுஞ்சாலை துறையினர் மெத்தனத்தால் விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், சாலை விரிவாக்கம் ஒரு பக்கம் நடக்கும் போது, அதன் எதிரில் சாலையோரம் கடைகள் வைப்பதற்கு நெடுஞ்சாலை துறை எப்படி அனுமதித்தது. விபத்து நடந்த இடத்தில் இருந்த சாலையோர கடைகளை அகற்றி இருந்தால் விபத்து நடந்திருக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.