ADDED : ஏப் 22, 2024 11:00 PM

துருபிடித்த ஊர் பெயர் பலகை
திருவாலங்காடு --- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் திருவாலங்காடு அடுத்து அமைந்துள்ளது சின்னம்மாபேட்டை கிராமம். இங்கு மாநில நெடுஞ்சாலை துறையினரால் வைக்கப்பட்ட ஊர் பெயர் பலகை துரு பிடித்து எழுத்துக்கள் அழிந்து காணப்படுகிறது.
இதே போன்று இந்த நெடுஞ்சாலையில் பல கிராமங்களின் பெயர் பலகை துரு பிடித்து அழிந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் ஊர் பெயர் தெரியாமல் தவிக்கின்றனர். எனவே இந்த ஊர் பெயர் பலகையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.நாகமுத்து, திருவாலங்காடு.
திருத்தணி - திருவாலங்காடு
அரசு பேருந்து வேண்டும்
திருத்தணியில் இருந்து திருவாலங்காடு செல்ல நேரடி அரசு பேருந்து வசதி கிடையாது. இதனால் திருத்தணியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகளில் பயணித்து, அரக்கோணத்தில் இறங்கி, அதன் பின், அரக்கோணத்தில் இருந்து மினி பேருந்து அல்லது ஆட்டோக்களில் செல்ல வேண்டி உள்ளது.
இதனால் நேரமும் பணமும் விரயமாகிறது. எனவே, திருத்தணி-திருவாலங்காடு நேரடி அரசு பேருந்து இயக்க வேண்டும்.
- -தி.சு.அறிவழகன், திருப்புலிவனம்.
ரயில் நிலையத்தில்
வீணாகும் கழிப்பறை
சென்னை -- - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது திருவாலங்காடு ரயில் நிலையம். இந்த மார்க்மாக தினமும் 270 புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதில் திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தில் உள்ள 50 கிராமங்களில் இருந்து சுமார் 70 ஆயிரம் பேர் வரை பயணிக்கின்றனர். இந்நிலையில் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் ஒன்றாவது நடைமேடையில் ஒரு கழிப்பறைமட்டுமே ரயில் பயணியர் பயன்பாட்டுக்கு உள்ளது.
பயணியர் பயன்பாட்டுக்காக மூன்றாம் நடைமேடையில் கழிப்பறை கட்டப்பட்ட நிலையில் கட்டி முடித்து இரண்டாண்டாக கழிப்பறை மூடி வைக்கப்பட்டுள்ளது.
கழிப்பறையை திறக்க ரயில்வே துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- க. அன்பழகன், திருவாலங்காடு.
