ADDED : ஏப் 01, 2024 11:04 PM

குப்பைமேடாக காட்சியளிக்கும், திருமழிசை தொழிற்பேட்டை
திருமழிசை தொழிற்பேட்டையில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள ஏழாவது பிரதான சாலையில் மலை போல் குப்பை தேங்கி உள்ளது.
இரவில் பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ பூச்சிகள் தொழிற்சாலைகளுக்கு நுழைந்து விடுவதால், காவலர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே தொழிற்பேட்டையில் குவிந்துள்ள குப்பையை அகற்ற வேண்டும்.
- ந.கோதை ஜெயராமன், நசரத்பேட்டை
சாலையின் நடுவில் மின் கம்பம்
பழவேற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பாளையக்கார தெருவில் மின்கம்பம் ஒன்று போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. கடந்த, சில தினங்களுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. மேற்கண்ட மின்கம்பத்தை அகற்றாமல் அதை சுற்றியும் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
இடையூறாக உள்ள மின்கம்பத்தால் வாகன தடுமாற்றம் அடைகின்றனர். கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேற்கண்ட மின்கம்பத்தை மாற்று இடத்தில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -ஆர்.ஜி. கிருஷ்ணா, பொன்னேரி
தார்ச்சாலை சீரமைக்க வேண்டும்
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது ஜாகீர்மங்கலம் கிராமம். இங்கு ஜாகீர்மங்கலம் -- - பழையனூர் வரையிலான இரண்டு கி.மீ., தூர தார்ச்சாலை 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்த தார்ச்சாலை மூன்று ஆண்டுகளாக சேதமடைந்து பல்லாங்குழி சாலையாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பகுதிவாசிகள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். சேதமடைந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் .
- க. ஜீவா, ஜாகீர்மங்கலம்.
