
பூட்டி கிடக்கும் கழிப்பறை
திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிவாசிகள் ஏராளமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர்.
நோயாளிகள் மருத்துவமனை உட்புறம் உள்ள கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர். நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையின் வெளிப்புறம் உள்ள கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர்
இந்த கழிப்பறை இரவு 7:00 மணிக்கு பின் மருத்துமவனை ஊழியர்களால் பூட்டப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் நோயாளிகளின் உறவினர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். கழிப்பறை குறித்து யாரிடம் புகார் அளிப்பது என்பது தெரியாமல் நோயாளிகளின் உறவினர்கள் புலம்பி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
- ஜி.மூர்த்தி, கடம்பத்துார்.
நெடுஞ்சாலையோர
முட்செடிகள் அகற்றப்படுமா?
திருத்தணியில் இருந்து கன்னிகாபுரம் வழியாக மாம்பாக்கசத்திரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தினமும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வேன், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சென்றவாறு இருக்கும்.
இந்நிலையில் சாலையின் இரு புறமும் முட்செடிகள் வளர்ந்து பாதி சாலையை மறைத்துள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் வருவது தெரியாமல் அடிக் கடி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் வளைவுகளில் திரும்பும் போது எதிரே வரும் வாகனம் தெரியாமல் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி தவித்து வருகின்றனர். எனவே திருத்தணி நெடுஞ்சாலை துறையினர் சாலையோரம் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும்.
- கா. ஹேமநாதன், கன்னிகாபுரம்.
தொட்டியில் எரிக்கப்படும் குப்பை
திருவாலங்காடு ஊராட்சி சன்னிதி தெருவில் வடாரண்யேஸ்வரர் கோவில் அருகே குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த குப்பை தொட்டியில் அப்பகுதியில் சேகரமாகும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேகரமாகும் குப்பையை கிடங்கில் கொண்டு சென்று அகற்றாமல் தூய்மை பணியாளர்கள் தொட்டியில் வைத்தே எரியூட்டுகின்றனர்.
இதனால் அப்பகுதியில் துார்நாற்றம் வீசுவதோடு, குப்பை தொட்டி பாழாகும் அபாயம் உள்ளது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.மகேஷ், திருவாலங்காடு.