
சேதமான மின்கம்பம்
மாற்றப்படுமா?
திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர்நகர் பகுதியில் அமைந்துள்ள மின்கம்பம் ஒன்று சிமென்ட் பூச்சு உதிர்ந்து கம்பிகள் வெளியில் தெரியும் நிலையிலும், ஆங்காங்கே விரிசல் அடைந்தும் உள்ளது.
இந்நிலையில் மின்கம்பம் பலமாக காற்று வீசினால் விழும் ஆபத்து உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
எனவே மின் துறை அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.விஜயன், திருவாலங்காடு.
நுாலகத்திற்கு சொந்த
கட்டடம் கட்டப்படுமா?
திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சியில் கிளை நுாலகம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வரை சரஸ்வதிநகர் பகுதியில் தனியார் கம்பெனிக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கி வந்தது.
அங்கு மின்சார வசதி இல்லாததால் வாசகர்கள் அவதிப்பட்டனர். இந்த நுாலகத்தில், 32, 632 புத்தகங்களும், 1,250 நுாலக வாசகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களாக கிளை நுாலகம் கார்த்திகேயபுரம் கிராமத்தில் வாடகை வீட்டில் இயங்கி வருகிறது. இணைய வசதி இருந்தும் வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்கு இடம் பற்றாக்குறை உள்ளது. ஆகையால் நுாலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--பி.சேகர், கார்த்திகேயபுரம்.
பயணியர் நிழற்குடை அமைக்கப்படுமா?
சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது நாராயணபுரம் கிராமம்.
இந்த கிராமத்தை சுற்றியுள்ள வரதாபுரம், குண்ணவலம், குப்பத்து பாளையம் மஞ்சாகுப்பம் உட்பட 10 கிராமங்களை சேர்ந்த மக்கள், திருவள்ளூர், திருத்தணி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பேருந்தில் செல்ல நாராயணபுரம் கூட்டுச்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து சென்று வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு நிழற்குடை இல்லாததால் பயணியர் வெயில், மழை வந்தாலும் வெளியில் நிற்க வேண்டிய நிலை உள்ளதால் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.
எனவே நாராயணபுரம் கூட்டு சாலையில் பயணியர் நிழற்குடை அமைக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி.குமார், நாராயணபுரம்.
சாலையோரம் குப்பை எரிப்பு
திருத்தணி அடுத்த மத்துார் கிராமத்திற்கு செல்லும் வழியில் ரயில்வே பாலம் அருகே சிலர் குப்பைகள் கொட்டிவிட்டு செல்கின்றனர்.
இதை ஊராட்சி நிர்வாகம் அகற்றாமல், குப்பைகளுக்கு தீ வைத்து கொளுத்துகின்றனர்.
அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தீ வைப்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் புகையால், துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர்.
பலமுறை வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் குப்பைகள் கொளுத்துவது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.பாண்டு, மத்துார்.

