
பழுதடைந்த மின்கம்பம்
திருவாலங்காடு ஒன்றியம் சிவாடா கிராமத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள நுாலகம் அருகே ஒரு மின் கம்பம் முற்றிலும் சேதமடைந்து கம்பத்தில் உள்ள சிமென்ட் தளம் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் உடைந்து விழுந்து விடும் அபாய நிலையில் உள்ளது. இதனால், நுாலக வாசகர்கள் மற்றும் குடியிருப்பு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பலமுறை மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே உயிர்ச்சேதம் ஏற்படாத முன்பு இந்த சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
- எஸ்.மோகன், சிவாடா.
நவீன சுத்திகரிப்பு நிலையம்
பயன்பாட்டிற்கு வருமா?
திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூர் ஊராட்சிக்கு உட்பட்டது மருதவல்லிபுரம் கிராமம். இங்கு ரேஷன் கடை அருகே திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ., நிதியில், 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.
ஒருவாரம் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நவீன சுத்திகரிப்பு நிலையம் 6 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் கோடைக்காலத்தில் கூடுதல் குடிநீரின்றி சிரமப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பல லட்சம் ரூபாய் மதிப்பில், அமைக்கப்பட்ட நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
பாலாபுரம் கூட்டு சாலையில்
நிழற்குடை வேண்டும்
ஆர்கே பேட்டை ஒன்றியத்தின் மேற்கு பகுதியில், ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது பாலாபுரம் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து அம்மையார் குப்பம் வழியாக திருத்தணிக்கும், வீரமங்கலம் வழியாக சோளிங்கருக்கும் தார் சாலை வசதி உள்ளது. பாலாபுரம், மகன் காளிகாபுரம் கூட்டு சாலையில் பேருந்துக்காக பகுதி வாசிகள் காத்திருந்து, பயணிக்கின்றனர். இந்த பகுதியில் நிழற்குடை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஒன்றிய நிர்வாகம், நிழற்குடை அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- -எல். நந்தகுமார், பாலாபுரம்.
பராமரிப்பு இல்லாத
குடிநீர் தொட்டி
பொன்னேரி அடுத்த பெரும்பேடு சத்திரம் கிராமத்தில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது. இந்த தொட்டி பராமரிப்பு இன்றி, குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிந்தபடி உள்ளது.
தொட்டியின் மேல் பகுதிக்கு செல்வதற்காக உள்ள இரும்பு ஏணி படிகள் துருப்பிடித்தும், அவற்றில் கொடிகள் சூழ்ந்துள்ளன. இதனால், தொட்டியை சுத்தப்படுத்தும் பணிகளும் தடைபட்டு உள்ளன.
எனவே, உடனடியாக குடிநீர் தொட்டியை சீரமைக்க, மீஞ்சூர் ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோ.கிருஷ்ணன், பொன்னேரி.