/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருப்பாலைவனத்தில் சேதமான தடுப்பணை
/
திருப்பாலைவனத்தில் சேதமான தடுப்பணை
ADDED : மே 16, 2024 12:32 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் கிராமத்தில் ஒடைக்கால்வாயின் குறுக்கே மழைநீரை சேமித்து வைக்கவும், உவர்ப்பு நீர் உட்புகுவதை தடுக்கவும்கட்டப்பட்ட தடுப்பணை சேதம் அடைந்து கிடக்கிறது.
தடுப்பணை கான்கிரீட் கட்டுமானங்கள் உடைந்தும், சுவர்களில் சிமென்ட் பெயர்ந்தும் மழைநீரில் அரித்து செல்லப்பட்டும் கிடக்கிறது. மழைநீரும் தேங்காமல், பழவேற்காடு ஏரியின் உவர்ப்பு நீரும் உட்புகுந்து நன்னீருடன் கலந்து வீணாவதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
புதுவாயல் பகுதியில் துவங்கும் இந்த ஓடைக்கால்வாய், சின்னகாவணம், மெதுார், அச்சரப்பள்ளம், திருப்பாலைவனம், தொட்டிமேடு உள்ளிட்ட, 10 கிராமங்கள் வழியாக பயணித்து, பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரியில் சென்று முடிகிறது.
திருப்பாலைவனம், அவரிவாக்கம், தொட்டிமேடு, பிரளயம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருக்கிறது. மேற்கண்ட ஒடைக்கால்வாயில் தேங்கும் மழைநீரை பயன்படுத்தி விவசாயம் செய்கிறோம்.
அதிக மழை பொழிவின்போது, ஓடைக்கால்வாய் வழியாக மழைநீர் வெளியேறி, பழவேற்காடு ஏரிக்கு செல்கிறது. கால்வாயில் நீர்வரத்து குறைந்த உடன், பழவேற்காடு ஏரியின் உவர்ப்புநீர் அதே கால்வாய் வழியாக பின்நோக்கி பயணித்து, நன்னீருடன் கலந்து விடுகிறது.
இதனால், ஓடையில் தேங்கும் மழைநீரும் உவர்ப்பாக மாறி விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
தடுப்பணை சேதத்தால், மழைநீரை சேமித்து வைக்கவும், உவர்ப்பு நீர் உட்புகுவதை தடுக்கவும் முடியாத நிலையே உள்ளது. கடந்த, 2017 ல் தடுப்பணை கட்டப்பட்டபோது, கட்டுமானங்கள் தரமாக இல்லை. அடுத்து வந்த மழைக்கே உடைந்து போனது. தொடர் பராமரிப்பு இல்லாமல் தற்போது முற்றிலும் சிதிலமடைந்து உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தொடர்கிறது. இந்த ஆண்டாவது, சேதம் அடைந்த தடுப்பணை முற்றிலும் இடித்து அகற்றி புதிய தடுப்பணை அமைக்கவும், கால்வாயை ஆழப்படுத்தி கரைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
***