/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் பாழடைந்த போலீஸ் குடியிருப்புகள்
/
பொன்னேரியில் பாழடைந்த போலீஸ் குடியிருப்புகள்
ADDED : ஜூன் 30, 2024 11:12 PM

பொன்னேரி: பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட, எம்.ஜி. நகர் பகுதியில் காவலர்களுக்கான குடியிருப்பு வளாகம், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இங்குள்ள, ஐந்து கட்டடங்களில், காவலர்களுக்கு, 30, தலைமை காவலர்களுக்கு இரண்டு என மொத்தம், 32 குடியிருப்புகள் உள்ளன. இது தவிர இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோருக்கும் தனித்தனி குடியிருப்புகளும் உள்ளன.
கட்டடங்கள் தொடர் பராமரிப்பு இன்றி போனதால், ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு, பயன்பாட்டிற்கு லாயக்கற்று போனது. அங்கு வசித்த காவலர்கள் ஒவ்வொருவராக வெளியேறியதை தொடர்ந்து, கடந்த, 15ஆண்டுகளாக குடியிருப்புகள் பயன்பாடு இன்றி கிடக்கிறது.
தற்போது கட்டடங்கள் முழுமையாக பாழடைந்து கிடக்கிறது. கட்டடங்களின் சுவர்களில் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்து உள்ளன. கதவு, ஜன்னல் உள்ளிட்டவை சூறையாடப்பட்டு உள்ளன. கட்டடங்களை சுற்றிலும், புதர் சூழந்தும், குப்பை குவிந்தும், சுற்றியுள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் தேங்கியும் இருக்கிறது.
கட்டடங்கள் சேதம் அடைந்தும், விரிசல்களுடன் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், ஒவ்வொரு ஆண்டும், புயல், மழைக்காலங்களில் அச்சம் அடைகின்றனர்.
தற்போது கட்டடங்களை சமூக விரோதிகள் குடிமையமாகவும், கஞ்சா புகைக்கும் இடமாகவும் பயன்படுத்துகின்றனர். இது குடியிருப்புவாசிகளை மேலும் அச்சம் அடைய செய்கிறது.
தற்போது மூன்று காவல் நிலையங்கள், அனைத்து மகளிர் காவல் நிலையம், மதுவிலக்கு அமல்பிரிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, பொன்னேரியை காவல் சரகமாக மாற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
காவலர்களுக்கான குடியிருப்புகள், சரக அலுவலகம் ஆகியவை அமைப்பதற்கு, பாழடைந்து சமூக விரோதிகளின் கூடமாக மாறி வரும் மேற்கண்ட காவலர் குடியிருப்பு வளாகத்தை பயன்படுத்தலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அசம்பாவிதங்கள் நேரிடும் முன் இடிந்து விழும் நிலையில் உள்ள போலீஸ் குடியிருப்பு வளாகத்தை, முழுமையாக இடித்து அகற்ற வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.