/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஹிந்தி எழுத்தை அழித்த தி.மு.க.,வினர் கைது
/
ஹிந்தி எழுத்தை அழித்த தி.மு.க.,வினர் கைது
ADDED : பிப் 25, 2025 02:30 AM

திருத்தணி,
தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி அமைப்பாளர் கிரண் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், நேற்று மதியம், திருத்தணி ரயில் நிலையத்திற்கு வந்து மும்மொழி கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அதை தொடர்ந்து, முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைமேடைகளில் வைக்கப்பட்டுள்ள, ரயில் நிலைய பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த ஹிந்தி மொழியை, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கிரண் கருப்பு மையால் அழித்தார்.
தகவல் அறிந்து, அரக்கோணம் ரயில்வே போலீசார் மற்றும் திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில், 15க்கும் மேற்பட்ட போலீசார் ரயில் நிலையத்திற்கு வந்து, சம்பவத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினரை கைது செய்து, திருத்தணியில் உள்ள காவலர்கள் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, மாலையில் அவர்களை விடுவித்தனர்.
l அதேபோல், பரங்கிமலை, ஜி.எஸ்.டி., சாலையில், அப்பகுதி தி.மு.க.,வினர், தொலை தொடர்பு அலுவலகம், தபால் நிலையம் மற்றும் ஏ.டி.எம்., மையத்தின் பெயர் பலகையில் இருந்த, ஹிந்தி எழுத்துகளை நேற்று அழித்தனர். இது தொடர்பாக, 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

