ADDED : செப் 12, 2024 07:05 AM

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் தீவிர சிகிச்சை பிரிவில் நல்லதம்பி, 40, என்பவர் பொது மருத்துவராக இரவு பணியில் இருந்தார். அப்போது மது போதையில் நோயாளி ஒருவருக்கு எடுத்த இ.சி.ஜி., ரிப்போர்ட்டை வைத்து, மற்றொரு நோயாளிக்கு சிகிச்சை அளித்தார்.
இதை பார்த்த நோயாளி மற்றும் உதவியாளர்கள் கேட்ட போது, அவர்களை ஒருமையில் ஆபாசமாக பேசி, வெளியே போகச் சொல்லி திட்டியுள்ளார். ஆத்திரமடைந்த நோயாளிகள், 'மருத்துவரிடம் நீங்கள் எப்படி மதுபோதையில் இங்கு வரலாம்' எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனே, மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவரை அழைத்துச் சென்றதோடு, நோயாளி மற்றும் உதவியாளர்களை சமாதானப்படுத்தினர். இந்த நிலையில் போதை தலைக்கேறிய மருத்துவர் நல்லதம்பி, வார்டுக்கு வெளியே உள்ள வாராண்டாவில் படுத்து, குறட்டை விட்டு துாங்கி உள்ளார். இதை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக, அவரை மருத்துவமனை உள்ளே செல்லுமாறு கெஞ்சினர். மருத்துவமனை பாதுகாவலர்கள் மருத்துவரை துாக்கி, தங்கள் தங்கும் அறையில் படுக்க வைத்தனர். போதை தெளிந்த நிலையில், நேற்று அதிகாலை மருத்துவர் எழுந்து வீட்டிற்கு சென்றார். தகவலறிந்த திருவள்ளூர் நகர போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.
இது குறித்து, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் ரேவதி கூறுகையில், ''குடிபோதையில் பணி மேற்கொண்ட மருத்துவர் மீது விசாரணை நடத்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.