/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எண்ணுார் - மாமல்லபுரம் 6 வழி சாலை பணி முடிக்க கெடு
/
எண்ணுார் - மாமல்லபுரம் 6 வழி சாலை பணி முடிக்க கெடு
எண்ணுார் - மாமல்லபுரம் 6 வழி சாலை பணி முடிக்க கெடு
எண்ணுார் - மாமல்லபுரம் 6 வழி சாலை பணி முடிக்க கெடு
ADDED : ஆக 06, 2024 02:27 AM

திருவள்ளூர்:எண்ணுார் முதல் மாமல்லபுரம் வரையிலான 6 வழிச்சாலை திட்டப் பணிகளை அமைச்சர் உதயநிதி நேற்று ஆய்வு செய்தார். பின், 2025க்குள் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டு உள்ளது.
அதன்படி தமிழக அரசு 2022ல் 'சென்னை எல்லை சாலைத்திட்டம்' என்ற பெயரில், எண்ணுார் துறைமுகம் முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை வரையில் 12 ஆயிரத்து 301 கோடி ரூபாய் மதிப்பில், 133 கி.மீ., துாரம் ஆறு வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பணிகள் ஐந்து கட்டங்களாக நடக்கின்றன.
இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் முதல் திருவள்ளூர் புறவழிச்சாலை வரை நடைபெறும் பணிகளை விளையாட்டு மற்றும் சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது சாலையின் வரைபடங்கள், பயன்படுத்தும் கட்டுமான பொருட்கள், வேலை செய்யும் முறைகளை அமைச்சர்கள் அதிகாரிகளிடம் கேட்டனர்.
வரும் 2025க்குள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமென, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். திருநின்றவூர் சாலையில் ஐந்து சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்கும் பணி உட்பட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர், நெடுஞ்சாலைத் துறை செயலர் செல்வராஜ், சென்னை எல்லை சாலை திட்ட இயக்குனர் ராமன் உடன் இருந்தனர்.
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையே நான்கு வழித்தட மேம்பாலச்சாலை அமைக்கும் பணி, ராஜிவ் காந்தி சாலை - கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில், புதிய சாலை, ராஜிவ் காந்தி சாலையில் டைடல் பூங்கா சந்திப்பில் 'யு 'வடிவ மேம்பால பணி, தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை, மத்திய கைலாஷ் மேம்பாலம் கட்டுமான பணி.
கலங்கரை விளக்கம் - கொட்டிவாக்கம் வரை கடல்வழி பாலம், திருவான்மியூர் - உத்தண்டி வரை மேம்பாலச்சாலை, மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் தாம்பரம் வரை மேம்பாலச்சாலை, பல்லாவரம் - சென்னை வெளிவட்டச் சாலையை இணைக்கும் மேம்பாலச்சாலை, படப்பை - மணிமங்கலம் புறவழிச்சாலை பணிகள் குறித்தும் அமைச்சர்கள் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.