/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடில் மின்விளக்கு பராமரிக்க எதிர்பார்ப்பு
/
பழவேற்காடில் மின்விளக்கு பராமரிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 22, 2024 12:06 AM

பழவேற்காடு:பழவேற்காடு லைட்ஹவுஸ்குப்பம், கரிமணல், அரங்கம்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், அங்குள்ள ஏரிக்கரைகளின் அருகில் மீன்பிடிப் படகுகள் நிறுத்துகின்றனர்.
அதே பகுதிகளில் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் வைத்திருக்கின்றனர்.
மீனவர்கள் வசதிக்காக, இப்பகுதியில், கடந்த, 2010ல் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. தொடர் பராமரிப்பு இல்லாததால், தற்போது மின்கம்பங்கள் துருப்பிடித்தும், மின்விளக்குகள் பழுதடைந்தும் கிடக்கின்றன. கடந்த காலங்களில் ஏற்பட்ட புயல் காற்றில், மின்விளக்குகள் கம்பங்கள் உடைந்தன.
இப்பகுதியில் மின்விளக்கு வசதியில்லாமல் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் மீனவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
அதேபோன்று, பழவேற்காடு பாலத்திலும் பொருத்தப்பட்ட மின்கம்பங்கள் உடைந்து, கீழே விழுந்து கிடக்கின்றன.
மேம்பாலமும் இருளில் மூழ்கி இருப்பதால், இரவு நேரங்களில் பழவேற்காடு பஜார் பகுதிக்கு சென்று வரும் பெண்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
லைட்ஹவுஸ்குப்பம் பகுதி மற்றும் பழவேற்காடு பாலத்தில் சேதம் அடைந்து, உடைந்து கிடக்கும் மின்கம்பங்களை அகற்றி, புதிய மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.