/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செயலிழந்த 'சிசிடிவி'க்களை சீரமைக்க எதிர்பார்ப்பு
/
செயலிழந்த 'சிசிடிவி'க்களை சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : மே 11, 2024 09:43 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த ஆலாடு, சிறுவாக்கம், வன்னிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், 2020ல், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 10 லட்சம் ரூபாய் செலவில், 46 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இவை குடியிருப்புகள், மாநில நெடுஞ்சாலை, கிராம சாலைகள், முக்கிய சாலை சந்திப்புகள் என பொருத்தப்பட்டன.
இவற்றின் உதவியுடன் கிராமப்புறங்களிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் குற்ற சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டு வந்ததால், பொதுமக்கள் நிம்மதியாக இருந்தனர். இந்நிலையில் மேற்கண்ட கண்காணிப்பு கேமராக்கள் தொடர் பராமரிப்பு இன்றி போனதால், அவை தற்போது செயலிழந்துள்ளன.
கம்பங்களுடன் கேமராக்கள் கீழே விழுந்தும், அதன் இணைப்பு கேபிள்கள் அறுந்தும் உள்ளன. ஒரு சில இடங்களில் கேமராக்கள் மாயமாகி, கம்பங்கள் மட்டுமே நிற்கின்றன.
மேற்கண்ட பகுதிகளில் செயலிழந்துள்ள கண்காணிப்பு கேமராக்களை உடனடியாக சரிசெய்து, அவற்றை பயன்பாட்டு கொண்டு வந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.