/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெல் விதைப்பிற்கு தயாராகும் நிலங்கள் உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரம்
/
நெல் விதைப்பிற்கு தயாராகும் நிலங்கள் உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரம்
நெல் விதைப்பிற்கு தயாராகும் நிலங்கள் உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரம்
நெல் விதைப்பிற்கு தயாராகும் நிலங்கள் உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரம்
ADDED : ஆக 05, 2024 02:28 AM

பொன்னேரி:பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட, கோளூர், திருப்பாலைவனம், காட்டூர் ஆகிய குறுவட்டங்களில், உள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளது.
அந்த கிராமங்களில், வடகிழக்கு பருவமழையை நம்பி, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சம்பா பருவத்தின்போது நெல் பயிரிடப்படுகிறது.
மேற்கண்ட கிராமங்களில், நேரடி நெல் விதைப்பு முறை பின்பற்றப்படுகிறது. நடவு முறையைவிட, நேரடி நெல் விதைப்பு வாயிலாக கூடுதல் மகசூல் கிடைப்பதால், விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் நேரடி நெல் விதைப்பில் ஈடுபடும் கிராமங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் அவ்வப்போது பெய்த மழையால், விளைநிலங்களில் நல்ல ஈரப்பதம் இருந்ததை தொடர்ந்து, சம்பா பருவத்திற்காக, விளைநிலங்களை டிராக்டர்களை கொண்டு உழுதும், சமன் செய்தும் பதப்படுத்தி வருகின்றனர்.
இம்மாத இறுதியில் நேரடி நெல் விதைப்பு பணிகளை துவங்க திட்டமிட்டு, விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
வழக்கத்தைவிட இந்த ஆண்டு, ஜூன், ஜூலை மாதங்களில் நல்ல மழை பொழிவு இருந்தது. அடுத்த சில தினங்களில் விதைப்பு பணிகளை மேற்கொள்வோம். செப்டம்பர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்கும். அதற்குள் நெல் விதைப்பு பணிகளை முடித்துவிடுவோம்.
அதன்பின், மழைநீர் மற்றும் ஏரிகளில் தேங்கும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்வோம். அதற்கு தகுந்தார்போல், தற்போது உழவு பணிகளை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.