/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிடப்பில் மெதுார் புதிய மின்பாதை பணி துரிதமாக மேற்கொள்ள மீனவர்கள் கோரிக்கை
/
கிடப்பில் மெதுார் புதிய மின்பாதை பணி துரிதமாக மேற்கொள்ள மீனவர்கள் கோரிக்கை
கிடப்பில் மெதுார் புதிய மின்பாதை பணி துரிதமாக மேற்கொள்ள மீனவர்கள் கோரிக்கை
கிடப்பில் மெதுார் புதிய மின்பாதை பணி துரிதமாக மேற்கொள்ள மீனவர்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 20, 2024 01:04 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த மெதுார் துணை மின்நிலையத்தில் இருந்து, பழவேற்காடு மற்றும் அதை சுற்றியுள்ள, 30 கிராமங்களுக்கு மின்வினியோகம் நடைபெறுகிறது. இங்கு, 10ஆயிரத்திற்கும் அதிகமான மின்பயனீட்டாளர்கள் உள்ளனர்.
பழவேற்காடு பகுதிக்கு மின்சாரம் செல்லும் மின்வழித்தடம் அமைத்து, 30ஆண்டுகள் ஆன நிலையில், கம்பங்கள், ஒயர்கள் காலாவதியாகின.
மேற்கண்ட மின்வழித்தடம், காஞ்சிவாயல், திருப்பாலைவனம், போலாச்சியம்மன்குளம், ஆண்டார் மடம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும், கழிமுகப்பகுதிகளில் மின்கம்பங்கள் அமைத்து கொண்டுசெல்லப்படுகிறது.
மழை, வெள்ள காலங்களில், விவசாய நிலங்களில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்தும், மின்ஒயர்கள் அறுந்தும் போகின்றன.
அதேபோன்று கழிமுகப்பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள் தண்ணீரில் இருப்பதால், மின்சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இதனால் மழை, வெள்ள காலங்களிலும், மீனவ கிராமங்களில் பலநாட்கள் மின்வெட்டு ஏற்பட்டுமீனவ மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், மெதுார் -- பழவேற்காடு இடையே சாலையோரம் புதிய மின்வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் 2021ல் துவங்கப்பட்டன.
வஞ்சிவாக்கம்- ஆண்டார்மடம் வரை மின்கம்பங்கள் புதியதாக பதிக்கப்பட்டு, அதில் மின்ஒயர்கள் பொருத்தப்பட்டன. மற்ற இடங்களில் அதற்கான பணிகள் மேற்கொள்ளாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் வீசிய புயலில் புதியதாக பதிக்கப்பட்ட மின்கம்பங்கள் கீழேவிழுந்தன. அதிலிருந்த ஒயர்களும் அறுந்தன. அவையும் இதுவரை சரிசெய்யப்படாமல் இருக்கிறது.
புதிய மின்வழித்தடம் அமைந்தால், மழைக்காலங்களில் ஏற்படும் மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த மீனவ மக்களுக்கு தற்போதுஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
மூன்று ஆண்டுகளாக நடைபெறும் புதிய மின்வழிப்பாதை திட்டப்பணிகளுக்கு எப்போது விமோசனம் கிடைக்கும் என தெரியவில்லை.
இந்த ஆண்டு மழைக் காலம் தொடங்கும் முன் கிடப்பில் போடப்பட்ட மின்வழித்தடத்திற்கான பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.