/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேருந்து சேவை துவக்க பூ விவசாயிகள் கோரிக்கை
/
பேருந்து சேவை துவக்க பூ விவசாயிகள் கோரிக்கை
ADDED : மார் 02, 2025 11:45 PM

சோழவரம், சோழவரம் அடுத்த இருளிப்பட்டு, அகரம், குதிரைப்பள்ளம், நெடுவரம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் மல்லி, சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூ வகைகள் வளர்க்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இவற்றின் வாயிலாக தினமும் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
தற்போது, சாமந்தி பூ வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு உள்ளனர்.
கோவில் திருவிழாக்கள், திருமண விழாக்களுக்கு இவை தொடர்ந்து தேவைப்படுவதால், சாமந்தி பூவிற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
மார்ச் முதல் செப்டம்பர் வரை கோவில்களில் பிரம்மோற்சவம், கும்பாபிஷேகம், ஆடித்திருவிழா, புரட்டாசி திருவிழா என, பல்வேறு விழாக்களுக்கு சாமந்தி பூ தேவை இருக்கும். முகூர்த்த நாட்களில் திருமண விழாக்களுக்கும் சாமந்தி பூவின் தேவை அதிகரிக்கும்.
இதன் காரணமாக, இவற்றை பயிரிட்டு தினமும் வருவாய் ஈட்டி வருகிறோம். அதே சமயம் போக்குவரத்து வசதி இல்லாததால், சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது.
இந்த வழித்தடத்தில் அரசு பேருந்துகளை இயக்கினால், விளையும் சாமந்தி பூக்களை வெளி சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.