/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
38 குழந்தைகளுக்கு இலவச இதய நோய் பரிசோதனை
/
38 குழந்தைகளுக்கு இலவச இதய நோய் பரிசோதனை
ADDED : ஜூலை 21, 2024 06:42 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, பிறந்த குழந்தை முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு மாதம் தோறும், 'எக்கோகார்டியோகிராம்' எனும் இதய நோய் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.
நேற்றைய முகாமில் சென்னை மியாட் மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர். மருத்துவக் கல்லுாரி முதல்வர் மருத்துவர் ரேவதி, குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் ஸ்டாலின் துவக்கி வைத்தனர்.
முகாமில், 0--18 வயது உடைய, இதய நோய் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், 38 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு இதய நோய் பாதிப்பினை 'எக்கோ' கருவி மூலம் கண்டறியப்பட்டது.
இது குறித்து தொடக்கநிலை இடையீட்டு சேவை மைய பொறுப்பாளர் மருத்துவர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:
குழந்தைகளுக்கு இதயநோய் பாதிப்பு உள்ளதா என்பதை, ஐந்து மாத கருவிலேயே கண்டறிய முடியும். பிறந்த பின், குழந்தைகளுக்கு இதய நோய் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய, உடல் பருமனாகாமல் இருத்தல், சளி, காய்ச்சல் பாதிப்பு இல்லாத நிலையிலும், மூச்சு திணறல் ஏற்படுதல், நகக் கண்கள் வீக்கம் ஏற்படுதல் இவற்றின் மூலம் அறிய முடியும்.
இந்த பாதிப்பு இருந்தால் அது இதய நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். நேற்று நடந்த முகாமில், 23 சிறிய அளவில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால், அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.