/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அடிக்கடி மின்வெட்டு: அலுவலகம் முற்றுகை
/
அடிக்கடி மின்வெட்டு: அலுவலகம் முற்றுகை
ADDED : மே 03, 2024 11:56 PM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், அரிசந்திராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1,000த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர்.
இப்பகுதிக்கு அரக்கோணம் அடுத்த மோசூர் துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.
கோடைக்காலம் துவங்கியது முதல் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதுடன் குறைந்த அளவு மின்னழுத்தத்தால் பகுதிவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மோசூரில் உள்ள மின்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதிகாரிகள் உங்கள் பகுதிக்கு தேவையான மின் உபகரணங்கள் கோரி அரசுக்கு முன்மொழிவுக்கு அனுப்பி உள்ளோம். நிதி ஒதுக்கப்பட்டதும் சீரமைக்கப்படும். பின் சீரான மின் வினியோகம் கிடைக்கும் என உத்தரவாதம் அளித்து சமரசம் செய்து அனுப்பினர்.
இதுகுறித்து அரிசந்திராபுரம் பகுதிவாசிகள் கூறியதாவது:
எங்கள் பகுதிக்கு மின்சாரம் வரும் மெயின் ஒயரில் பல இடங்களில் பழுது ஏற்பட்டு ஒட்டு போடப்பட்டுள்ளது. இதனால் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு 'ப்ரிஜ்', மின்விசிறி, 'டிவி' போன்ற மின்சாதன பொருட்கள் பழுது ஏற்படுகின்றன. மேலும் ஒட்டு போட்ட ஒயரால் சிறிய காற்று வீசினாலே மின்வெட்டு ஏற்படுகிறது.
கடந்த வாரம் இரண்டு நாட்கள் இரவு முழுதும் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர். தினமும், 5 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இதை சீரமைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.