/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இழப்பீடு வழங்காததால் அரசு விரைவு பஸ் ' ஜப்தி '
/
இழப்பீடு வழங்காததால் அரசு விரைவு பஸ் ' ஜப்தி '
ADDED : செப் 12, 2024 02:41 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 40. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2002 ஜூலை 31ம் தேதி வெங்கடேசன், சக ஆசிரியர்களுடன் வேன் தமிழகத்தில் முக்கிய கோவில்களுக்கு சுற்றுலா சென்றார்.
கடலுார் மாவட்டம் ராமநத்தம் பகுதியில், வேன் சென்றபோது, எதிரே வந்த அரசு விரைவு பேருந்து மோதியது. இதில், வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையடுத்து, வெங்கடேசன் மனைவி கலைவாணி, 2003ம் ஆண்டு திருவள்ளூர் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையில், கடந்த 2005ம் ஆண்டு ஆக., 5ம் தேதி விபத்து ஏற்படுத்திய அரசு விரைவு பேருந்து நிர்வாகம் சார்பில், வெங்கடேசன் குடும்பத்தினருக்கு, 3.90 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நேற்று முன்தினம் வரை இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுபடி, வழக்கறிஞர் முருகேசன் உதவியுடன், பாதிக்கப்பட்ட வெங்கடேசன் குடும்பத்தினர் நேற்று, அரசு விரைவு பேருந்தை 'ஜப்தி' செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர்.