/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி பகுதியில் ரூ. 4 லட்சம் பறிமுதல்
/
பொன்னேரி பகுதியில் ரூ. 4 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 28, 2024 08:53 PM
பொன்னேரி:திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, பொன்னேரி சட்டசபைக்கு, தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இக்குழுவினர், 24 மணிநேரமும் சுழற்சி முறையில் தேர்தல் நன்னடத்தை விதிகளை கண்காணித்து வருகின்றனர்.
நேற்று நீர்வளத்துறை உதவிப்பொறியாளர் கண்ணன் தலைமையிலான குழுவினர், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட சென்னை கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பொன்னேரியில் இருந்து புதுவாயல் நோக்கி சென்ற, எரிடிகா காரை சோதனை செய்தபோது, அதில், கட்டுக்கட்டாக, 500 ரூபாய் நோட்டுகள், 4 லட்சம் ரூபாய் இருந்தன.
காரில் இருந்த, பழவேற்காடு பகுதியை சேர்ந்த பெர்னார்டு என்பவரிடம் ஆவணங்கள் குறித்து கேட்டபோது, இவை மீனவர் சங்க உறுப்பினர்கள் பணம் எனவும், கும்மிடிப்பூண்டியில் உள்ள வங்கியில் செலுத்த கொண்டு செல்வதாகவும் தெரிவித்து உள்ளார்.
அது தொடர்பான ஆவணம் இன்றி பணம் கொண்டு செல்லப்பட்டதால், தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.
அதை பொன்னேரி சப்கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்திடம் ஒப்படைத்தனர். பின் 'சீல்' வைக்கப்பட்டு, பொன்னேரி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
lகும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே பூவலம்பேடு சந்திப்பில், தாசில்தார் கார்த்திகேயன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் பயணித்த, சத்தியவேடு அடுத்த டி.வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பைசுபீ, 33, என்ற பெண்ணிடம், கணக்கில் வராத, 97,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உறவினர் திருமணத்திற்காக, வண்ணாரப்பேட்டையில் ஜவுளி எடுக்க சென்றதாக பைசுபீ தெரிவித்துள்ளார்.

