/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைக்கு குளமாக மாறிய கண்ணதாசன் நகர் சாலை
/
மழைக்கு குளமாக மாறிய கண்ணதாசன் நகர் சாலை
ADDED : ஆக 08, 2024 02:41 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சி, பஜார் பகுதியையொட்டி கண்ணதாசன் நகர் அமைந்துள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகள் எதுவும் இல்லை. இதையடுத்து, இப்பகுதி மக்களின் நீண்ட கால போராட்டத்திற்கு பின், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், 18 லட்சம் ரூபாய் செலவில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது.
இந்த கால்வாய் பணியின் போது, சாலை பெருமளவு சேதமானது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் இச்சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே செல்கின்றனர்.
மேலும், பெண்கள், வயதானவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். தற்போது பெய்த மழையால், இச்சாலையில் உள்ள பள்ளங்களில், தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இந்த பள்ளங்களில் தேங்கியுள்ள தண்ணீரில் வாகனங்கள் செல்லும் போது, பாதசாரிகள் மீது தண்ணீர் தெறிக்கிறது.
எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கண்ணதாசன் நகர் பகுதியில் தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.