/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி தனியார் மருத்துவமனை முற்றுகை: உயிரிழந்தவரின் தாய் தீக்குளிக்க முயற்சி
/
கும்மிடி தனியார் மருத்துவமனை முற்றுகை: உயிரிழந்தவரின் தாய் தீக்குளிக்க முயற்சி
கும்மிடி தனியார் மருத்துவமனை முற்றுகை: உயிரிழந்தவரின் தாய் தீக்குளிக்க முயற்சி
கும்மிடி தனியார் மருத்துவமனை முற்றுகை: உயிரிழந்தவரின் தாய் தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜூன் 13, 2024 05:02 PM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் வசித்தவர் மகேஷ், 30. தனியார் தொழிற்சாலையில் வெல்டர் வேலை பார்த்தார். 10ம் தேதி மாலை வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற மகேஷ் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில், ‛ஆல்பா' என்ற பெயரில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த போது உடல் நிலை மோசமாகி சுயநினைவு இழந்தார்.
அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாயிலாக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். மறுநாள் காலை, உறவினர்களும், கிராம மக்களும், தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.
இந்நிலையில், நேற்று மீண்டும் அந்த தனியார் மருத்துவமனையை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
போலீசார் பேச்சு நடத்தும் போது, உயிரிழந்த மகேஷின் தாயார் விஜயா, 59, மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அங்கிருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, தண்ணீரை எடுத்து அவர் மீது ஊற்றி தடுத்தார். பின் மருந்துவமனை எதிரே தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை மருத்துவமனை மூடப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். பின் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.