/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறைவான பேருந்து சேவை மீஞ்சூரில் மாணவியர் தவிப்பு
/
குறைவான பேருந்து சேவை மீஞ்சூரில் மாணவியர் தவிப்பு
ADDED : ஜூன் 17, 2024 03:12 AM
பொன்னேரி, : பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில், தடப்பெரும்பாக்கம், கொக்குமேடு, எலவம்பேடு, மேட்டுப்பாளையம், நாலுார் கம்மார்பாளையம், வன்னிப்பாக்கம் என, 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் வழியாக காட்டூர், தத்தமஞ்சி, ஊரணம்பேடு கிராமங்களுக்கு செல்லும், மூன்று பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
இந்த வழித்தடத்தில் குறைந்த பேருந்துகள் இயக்கப்படுவதால், ஷேர் மற்றும் மேஜிக் ஆட்டோக்களை பயணியர் நம்பி உள்ளனர்.
இந்த வழித்தடத்தில், 200க்கு அதிகமான ஷேர் ஆட்டோக்கள் மற்றும் மேஜிக் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இவை, பயணியரை அளவுக்கு அதிகமாக ஏற்றி அசுர வேகத்தில் பயணிக்கின்றன. இதனால் பயணியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
பொன்னேரி, வேண்பாக்கம் பகுதியில் உள்ள, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேற்கண்ட வழிதடத்தில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவியர் படிக்க வந்து செல்கின்றனர்.
பேருந்து சேவை குறைவாக இருப்பதாலும், அவை பள்ளி நேரத்தில் வந்து செல்லாததாலும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வேறு வழியின்றி, ஆட்டோக்களில் பயணிக்கின்றனர்.இதற்காக மாணவியர் தினமும், 40 - 60ரூபாய் வரை செலவிட வேண்டி நிலை உள்ளது.
பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில், நேரடி நகரப்பேருந்துகளை அதிகளவில் இயக்க வேண்டும். இது மாணவியருக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.