/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பியதால் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடு
/
லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பியதால் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடு
லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பியதால் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடு
லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பியதால் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடு
ADDED : டிச 07, 2024 02:13 AM

பொன்னேரி,
பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தில், ஆரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டுள்ளது. இந்த அணைக்கட்டில், 0.14 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இது ஆற்றின் கரையோர கிராமங்களில், 3,037 ஏக்கர் பரப்பில் விவசாய பணிகளுக்கு பயன் தருகிறது.
மழைக்காலங்களில் அணைக்கட்டு நிரம்பியதும் உபரிநீர், அங்குள்ள ஷட்டர்கள் வழியாக, பெரும்பேடு, காட்டூர், தத்தமஞ்சி ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மேலும், ஆலாடு, லட்சுமிபுரம், சின்னகாவணம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் கரையோரங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு மழையின்போது, அணைக்கட்டு பகுதியில் தேங்கிய தண்ணீர் படிப்படியாக குறைந்து, இந்த ஆண்டு கோடையின்போது வறண்டது. இதனால், ஆற்றின் கரையோர கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் பாதித்தது.
விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் தேவைக்காக போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறப்பட்ட தண்ணீரில், உவர்ப்பு தன்மை ஏற்பட்டது.
இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனர். கிராமங்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் உவர்ப்பு தன்மை இருந்ததுடன், அவை செயலிழக்கும் நிலையும் ஏற்பட்டது.
இந்நிலையில், வறண்டு கிடந்த ஆரணி ஆற்றில், கடந்த அக்டோபர் மாதம் பெய்த வடகிழக்கு பருவ மழையால் நீர்வரத்து ஏற்பட்டது.
கடந்த மாதம் இறுதியில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், லட்சுமிபுரம் அணைக்கட்டிற்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், அணைக்கட்டு நிரம்பி வழிகிறது.
அணைக்கட்டு நிரம்பியதால், அருகில் உள்ள கிராமங்களில், நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் தேவைக்காக போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் இருந்து கிடைக்கும் தண்ணீரில் உவர்ப்பு தன்மை குறைந்து உள்ளது.
இதனால் விவசாயிகள் மற்றும் கிராமவாசிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.