/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
9 விரைவு ரயில்களுக்கு திருவள்ளூரில் நிறுத்தம் ஜனாதிபதிக்கு கடிதம்
/
9 விரைவு ரயில்களுக்கு திருவள்ளூரில் நிறுத்தம் ஜனாதிபதிக்கு கடிதம்
9 விரைவு ரயில்களுக்கு திருவள்ளூரில் நிறுத்தம் ஜனாதிபதிக்கு கடிதம்
9 விரைவு ரயில்களுக்கு திருவள்ளூரில் நிறுத்தம் ஜனாதிபதிக்கு கடிதம்
ADDED : ஏப் 30, 2024 10:09 PM
சென்னை:சென்னை ரயில்வே கோட்டத்தில், திருவள்ளூர் முக்கிய புறநகர் ரயில் நிலையமாக உள்ளது. இது, சென்னை சென்ட்ரலில் இருந்து 42 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் விரைவு ரயில்கள், வெளிமாவட்டங்களில் சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்கள், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என, பயணியர் மற்றும் திருவள்ளூர் ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதாவது, சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் -- கே.எஸ்.ஆர்., பெங்களூரு பிருந்தாவன் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - கோவை -இன்டர்சிட்டி, சென்னை சென்ட்ரல் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு லால்பாக் விரைவு ரயில் உட்பட ஒன்பது விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
இதற்கிடையே, ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு சார்பில் கடிதம் எழுதி அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு தலைவர் ஜெயபால்ராஜ் எழுதிய கடிதம்:
பல்வேறு சிறப்பு வாய்ந்த திருவள்ளூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். பலரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை.
திருவள்ளூரில் விரைவு ரயில்கள் நின்று செல்வது தொடர்பாக சென்னை ரயில்வே மேலாளருக்கு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கடிதம் எழுதினர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, பயணியர் வசதிக்காக, சென்னையில் இருந்து கோவை, கே.எஸ்.ஆர்., பெங்களூரு, மும்பை, காச்சிகுடா, திருவனந்தபுரம், மேட்டுப்பாளையம், மங்களூர் ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள், திருவள்ளூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை பரிசீலனை செய்ய ரயில்வே வாரியத்துக்கு குடியரசு தலைவர் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.