/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீர் கால்வாய் சேதம் வாகன ஓட்டிகள் அச்சம்
/
மழைநீர் கால்வாய் சேதம் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : மே 01, 2024 01:28 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் - செங்குன்றம் சாலையோரம் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய் சேதமடைந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
திருவள்ளூர் - செங்குன்றம் மாநில நெடுஞ்சாலை வழியாக, தினமும் 1,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. 10 ஆண்டுகளுக்கு முன் இந்த சாலை அகலப்படுத்தப்பட்டு, இருபுறமும் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. கால்வாய் மேல், 'சிமென்ட் சிலாப்' வைத்து மூடப்பட்டது.
இந்த நிலையில், திருவள்ளூரில் இருந்து ஈக்காடு வரை, சாலையின் இருபுறமும் உள்ள மழைநீர் கால்வாய் மீது அமைக்கப்பட்ட சிமென்ட் சிலாப் உடைந்து, சேதமடைந்து காணப்படுகிறது.
இதனால், இரவு நேரத்தில் சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகள், உடைந்த கால்வாயில் விழுந்து காயமடைந்து செல்கின்றனர்.
மேலும், கால்வாய் உடைந்துள்ளதால், அவற்றில் மண் மற்றும் குப்பை நிரம்பி, கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது.
கொட்டப்பட்ட குப்பையை சிலர் தீ வைத்து எரிப்பதால், ஏற்படும் புகையால் பகுதிவாசிகளுக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது.
மேலும், மழைக்காலத்தில் கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாமல், சாலையில் குளம்போல் தேங்கி விடுகிறது. இதன் காரணமாக, சாலையும் சேதமடைந்து வருகிறது.
எனவே, நெடுஞ்சாலை துறையினர், சேதமடைந்த மழைநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.